நிஷின்: ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நேற்று நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தானுடன் மோதியது. நிஷின் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 28 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் விளாசினார். அவரது அதிரடியால் பவர்பிளேவில் 81 ரன்கள் குவிக்கப்பட்டன. மற்றொரு தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி 15 ரன்களில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 2, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 21, இஷான் கிஷன் 20 ரன்களில் வெளியேறினர்.
இறுதிக்கட்ட ஓவர்களில் மட்டையை சுழற்றிய திலக் வர்மா 22 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஷிவம் துபே 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி கடைசி 5 ஓவர்களில் 62 ரன்களை வேட்டையாடியது.
சுழற்பந்து வீச்சாளர்களான சுஃப்யான் மோகிம் வீசிய 18-வது ஓவரில் 18 ரன்களும், சைம் அயூப் வீசிய 19-வது ஓவரில் 23 ரன்களும், வேகப்பந்து வீச்சாளர் அஹ்மத் டேனியல் வீசிய கடைசி ஓவரில் 16 ரன்களும் விளாசப்பட்டன. இந்திய அணி ஒட்டுமொத்தமாக 15 சிக்ஸர்களை விளாசியது.
பாகிஸ்தான் அணி தரப்பில் அஹ்மத் டானியல், அராபத் மின்ஹாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 212 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 192 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அதிகபட்சமாக ஹசன் நவாஷ் 51 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் விளாசினார். பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 52 ரன்கள் தேவையாக இருந்தன. 18-வது ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டை கைப்பற்றியதுடன் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இது பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.
பும்ரா வீசிய அடுத்த ஓவரில் 11 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஷிவம் துபே வீசிய கடைசி ஓவரில் 33 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் 13 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் அணியால் எடுக்க முடிந்தது. இதனால் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றது.