“பாஜகவின் வெற்றியே ‘வாக்குத் திருட்டு’ ஆணைய நோக்கம்” - ராகுல் காந்தி சரமாரி குற்றச்சாட்டு

“பாஜகவின் வெற்றியே ‘வாக்குத் திருட்டு’ ஆணைய நோக்கம்” - ராகுல் காந்தி சரமாரி குற்றச்சாட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: வாக்குத் திருட்டு ஆணையத்தின் ஒரே நோக்கம் எப்படியாவது பாஜக வெற்றிபெற வேண்டும் என்பதும், நாட்டின் ஜனநாயகம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுமே என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பாஜகவும், அந்த வாக்கு திருட்டு ஆணையமும் தங்கள் உத்திகளை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இனியும் அவ்வாறே செய்வார்கள். அவர்களின் நோக்கம் இதுதான். எப்படியாவது பாஜக வெற்றிபெற வேண்டும், அதோடு, இந்தியாவின் ஜனநாயகம் ஒழிக்கப்பட வேண்டும்.

மகாராஷ்ட்ராவில் கடந்த 2024-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில் திடீரென 39 லட்சம் புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இது ஒரு வாக்குத் திருட்டு என்று நான் அப்போதே சொன்னேன். இப்போதும் சொல்கிறேன், அது ஒரு வாக்குத் திருட்டு.

இதேபோல், இந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது நீக்கப்பட்ட பெயர்களில் 91% பெயர்கள் மேல்முறையீடுகளுக்குப் பிறகு மீண்டும் சேர்க்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதாவது, ஒவ்வொரு 10 பெயர்களில் 9 பெயர்கள் தவறாகவே நீக்கப்பட்டிருந்தன. தேர்தலுக்குப் பின்னரே அவை மீண்டும் சேர்க்கப்பட்டன. இது ஒரு வாக்குத் திருட்டு என்று நான் அப்போதும் சொன்னேன், அதையே இப்போதும் சொல்கிறேன்.

தற்போது, மகாராஷ்டிராவில் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 2.07 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒவ்வொரு ஐந்து வாக்காளர்களில் ஒருவரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9.29 கோடி. அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 9.70 கோடி. இந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு வாக்காளர்களின் எண்ணிக்கை 7.78 கோடி. இவற்றில் எந்த பட்டியல் சரியானது?

வாக்குத் திருட்டின் மூலம் அமைக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தைப் பொறுத்தவரை, மக்கள் ஒரு பொருட்டல்ல. அதனால்தான் இந்த பாஜக, மக்களுடைய கருத்துக்களுக்குச் செவி சாய்ப்பதோ அல்லது அவர்களின் ஆணையை ஏற்று நடப்பதோ இல்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.

“பாஜகவின் வெற்றியே ‘வாக்குத் திருட்டு’ ஆணைய நோக்கம்” - ராகுல் காந்தி சரமாரி குற்றச்சாட்டு
சிஜேபி-யின் செப்.5 பேரணிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in