

கோழிக்கோடு: கேரளாவில் நேற்று முன்தினம் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் குறிப்பாக வடக்கு மாவட்டங்களில் வன்முறை வெடித்தது.
கோழிக்கோடு மாவட்டம் எரமலா பகுதியில், காங்கிரஸ் அலுவலகம் மீது மார்க்சிஸ்ட் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து சனிக்கிழமை இரவு முழுவதும் பதற்றம் நிலவியது. இது தொடர்பாக சுமார் 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மராட் பகுதியில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிப் பேரணியின் மீது கற்கள் வீசப்பட்டதில் பலர் காயம் அடைந்தனர்.
வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியில் காங்கிரஸ் ஆதரவாளர் ஒருவரின் கார் தாக்கப்பட்டது. இங்கு மற்றொரு சம்பவத்தில் மார்க்சிஸ்ட் தொண்டர் ஒருவர் தாக்கப்பட்டார்.
இதுபோல் கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. திருவனந்தபுரம் மாவட்டத்தில் மார்க் சிஸ்ட் - பாஜக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் காயம் அடைந்தனர்.