

புதுடெல்லி: ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது.
இந்தியாவிலேயே தனியார் நிறுவனம் தயாரித்த முதல் ராக்கெட்டாகும் (லாஞ்ச் வெஹிகிள்) இது. விண்வெளியில் பூமியின் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவதற்கான ராக்கெட்டாகவும் இது செயல்படும். இந்த வகை ராக்கெட்டை ஜூலை 12-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள்ளாக விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்து பார்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இந்த ராக்கெட் சோதனை செய்யப்படவுள்ளது. இதுகுறித்து ஸ்கைரூட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பவன் குமார் சந்தனா நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இந்த விக்ரம்-1 ராக்கெட்டை ஏவி சோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ராக்கெட் பணிகளை ஒருங்கிணைத்தல், சோதித்தல் பணிகள் நிறைவடைதல், வானிலை, பாதுகாப்பு, ஏவுதள அனுமதி ஆகியவற்றைப் பொறுத்தே இதன் ஏவுதல் தேதி அறிவிக்கப்படும்” என்றார்.