

பாட்னா: பிஹார் முன்னாள் முதலமைச்சர் ராப்ரி தேவி, கடந்த இருபது ஆண்டுகாலமாக தன் வசம் வைத்திருந்த அரசு பங்களாவை காலி செய்துவிட்டு, நேற்று தனது சொந்த வீட்டிற்கு குடியேறினார்.
கடந்த 2005 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்த பிறகு, அப்போதைய நிதிஷ் குமார் நிர்வாகம் ராப்ரி தேவிக்கு 10, சர்க்குலர் ரோட்டில் அமைந்துள்ள அரசு பங்களாவை ஒதுக்கியது. இது முதலமைச்சரின் இல்லத்திற்கு எதிரே, ஆளுநர் மாளிகைக்கு மிக அருகில் உள்ள மிக முக்கியப் பகுதியாகும். இது, அவரது கணவர் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் முகாம் அலுவலகமாகவும், ராப்ரி தேவியின் இல்லமாகவும் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
பிஹாரின் ஆளுங்கட்சியான ஜே.டி(யு) தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசுடன் ஆர்ஜேடி இணக்கமாக இருந்தவரை, இந்த பங்களா அவர்களின் முக்கிய அரசியல் மையமாக இருந்தது. ஆனால், தற்போது சாம்ராட் சவுத்ரி தலைமையிலான பாஜக அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, ராப்ரி தேவி அரசு பங்களாவை காலி செய்துவிட்டு சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள கவுடில்யா நகரில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ராப்ரி தேவி காலி செய்த பங்களா, தற்போது பாஜக தலைவரும் அமைச்சருமான நந்த் கிஷோர் ராமுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.