

புதுடெல்லி: மகாத்மா காந்தி, சர்தார் வல்லப பாய் படேல், பிரதமர் நரேந்திர மோடி ஆகிய 3 பெரும் தலைவர்களை குஜராத் மாநிலம் நாட்டுக்கு வழங்கியிருக்கிறது என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள காந்தி ஆசிரமத்தில் ஹரிஜன் சேவை சங்கத்தில் மகாதேவ் தேசாய் நூலகம் கட்டப்பட்டு உள்ளது. இந்த நூலகத்தை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தின் மதுரையில் விவசாயிகளின் வறுமையைக் கண்ட காந்தியடிகள், மேற்கத்திய ஆடையை துறந்து, வேட்டியை மட்டுமே அணிந்தார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் சுதேசி கொள்கையை ஊக்குவித்தார். மகாத்மா காந்தியால் உருவாக்கப்பட்ட ஹரிஜன் சேவை சங்கம் தீண்டாமை உள்ளிட்ட சமூக கொடுமைகளை எதிர்த்து போராடி வருகிறது. ஒவ்வொரு தனிநபரும் சமுதாயத்துக்கு சேவையாற்ற வேண்டும்.
நாட்டை கட்டி எழுப்ப உறுதுணையாக இருக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு குஜராத் மிக முக்கிய பங்களிப்பை வழங்கியிருக்கிறது. காந்தியடிகள், சர்தார் வல்லபபாய் படேல், பிரதமர் நரேந்திர மோடி ஆகிய 3 பெரும் தலைவர்களை குஜராத் மாநிலம் நாட்டுக்கு வழங்கியிருக்கிறது. இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.