

புதுடெல்லி: முன்னாள் தமிழக அமைச்சரான க.ராசாராம் குறித்த நூலை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டார். இந்த நிகழ்வு குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகருமான அவரது வாழ்க்கை மற்றும் சமூக, அரசியல் பங்களிப்புகளைப் பதிவு செய்யும் நூலின் பெயர் ‘க.ராசாராம் - அரசியல் சமூகப் பேராளுமை’ ஆகும்.
இந்நூலை பிரபல மூத்த எழுத்தாளர் ராணி மைந்தன் எழுதியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, மறைந்த க.ராசாராமின் மகன் ராஜசேகர், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் பேசியது: “க.ராசாராமின் வாழ்க்கை, அரசியல் மற்றும் சமூகப் பணிகளின் வரலாற்றைப் பதிவு செய்யும் நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது பன்முகப் பங்களிப்புகள் எதிர்கால தலைமுறைகளுக்கு அறிமுகமாக இந்நூல் உதவும்.
க.ராசாராமின் வாழ்க்கை பல்வேறு ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து சிறப்பான பயணமாக அமைந்தது. அவரின் வாழ்க்கை மகத்தான பரிணாம வளர்ச்சி கொண்டது. கடவுள் இல்லை என்று தொடங்கிய அவரது வாழ்க்கைப் பயணம் அவனன்றி ஒரு அணுவும் அசைவும் என்று இறைப்பணியில் முழு ஈடுபாட்டோடு நிறைவு பெற்றது.
இவரை நான் ஒருமுறை திருப்பூரில் சந்தித்தேன். அப்போது அவரின் ஆன்மிக பற்றினை கண்டு வியந்து கேள்வி எழுப்பினேன். இதற்கு அவர் சொன்ன வார்த்தை இன்றைக்கும் என்றைக்கும் மனதை விட்டு அகலவில்லை.
’எந்த ஒரு மனிதனும் தொடர்ந்து இயற்கைக்கு எதிராக எதிர்நீச்சல் போட்டுக் கொண்டே இருக்க முடியாது. ஒரு கட்டத்தில் இறை உணர்வு ஒருவனுக்கு வந்தே தீரும். அதுதான் மகத்தான பரிணாம வளர்ச்சி’ என்று குறிப்பிட்டார்.
ஈ.வே.ரா.பெரியாரின் சீடராகவும் உதவியாளராகவும் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கிய ராசாராம், பின்னர் காஞ்சி மகாஸ்வாமிகளின் விருப்பப்படி கோயில் திருப்பணியில் ஈடுபட்ட ஆன்மிகத் தொண்டராக தனது வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்தார்.
க.ராசாராம் முதலில் தேசிய அளவிலான அரசியலில் அறியப்பட்டவர். 1962-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்தும், 1967-ஆம் ஆண்டு சேலம் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து தமிழக அரசியலில் முக்கியப் பொறுப்புகளை வகித்த க.ராசாராம், 1971-ஆம் ஆண்டு வீட்டு வசதித் துறை அமைச்சராகவும், 1980-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் இருந்தார்.
1984-ஆம் ஆண்டு தொழில்துறை மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சராகவும், 1991-ஆம் ஆண்டு உணவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். எம்.ஜி. ராமச்சந்திரன், மு. கருணாநிதி மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகிய மூன்று முதலமைச்சர்களின் அமைச்சரவைகளில் அமைச்சராகப் பணியாற்றிய பெருமை க.ராசாராமுக்கு உண்டு.
மாநில அரசில் அமைச்சராக இருந்தபோதிலும், டெல்லியில் தேசிய அரசியல் தலைவர்களுடனான தனது நட்புறவு மற்றும் தொடர்புகளைத் தொடர்ந்து பேணி வந்தார். இதன் மூலம் தமிழக அரசின் நலன்களை மத்திய அரசிடம் எடுத்துரைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.
மாநில, மத்திய அரசுகளுக்கு இடையே பாலமாக அவர் திகழ்ந்தார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன், ராசாராமை தமிழக அரசின் பிரதிநிதியாக டெல்லியில் நியமித்தார். தமிழ்நாடு இல்லத்தில் அவருக்கென அலுவலகம் அமைத்துக் கொடுத்தார்.
புதுமையான சிந்தனைகளும், புதிய முயற்சிகளை பெரிய அளவில் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் க.ராசாராமிடம் இயல்பாகவே இருந்தது.
சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தபோது மாமல்லபுரத்தில் பொங்கல் விழாவை நடத்தியது, போன்றவை அவரது புதுமையான அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டுகள். வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தபோது கடைநிலை அரசுப் பணியாளர்களுக்காக ‘ஒரு ரூபாய்க்கு வீடு’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தினார்.
கடனுதவியுடன் தினமும் ஒரு ரூபாய் செலுத்தி வீடு பெறும் வகையில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். கிராமப்புற நெசவாளர்களுக்குத் தறி அமைப்பதற்கான வசதியுடன் கூடிய வீடுகளை அமைத்துக் கொடுத்ததும் அவரது சமூக அக்கறையையும் புதுமையான சிந்தனையையும் வெளிப்பட்டது.
1962-ஆம் ஆண்டு ‘திருவிளக்கு’ பத்திரிகையைத் தொடங்கி 14 ஆண்டுகள் சிறப்பாக நடத்தியவர் ராசாராம். அவசரநிலை காலத்தில் அதனைத் தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. எந்நேரமும் படித்துக்கொண்டிருக்கும் பழக்கம் கொண்டிருந்த அவர், ‘கவிராஜன்’ என்ற புனைப்பெயரில் எழுதினார். உலக வரலாற்றுச் செய்திகள், சிறிய ஆப்பிரிக்க நாடுகளின் வரலாறு குறித்த ‘விடுதலை பெற்ற சின்னஞ்சிறு நாடுகள்’ உள்ளிட்ட படைப்புகளையும், தென்கிழக்காசியப் பயணக் கட்டுரைகளையும் எழுதினார்.
எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயக நாட்டில் அது தவறான நடைமுறை என ராசாரம் கண்டித்தார். ’ஒரு ராணுவக் கூடாரத்துக்குள் தமிழ்நாட்டை சுருட்டி போட்டு அடைத்து வைத்தாற் போல உணர்ந்தேன்’ என்று பதிவு செய்திருந்தார்.
அவருடைய ஆழமான வார்த்தைகள் அவசரநிலையை அவர் எவ்வாறு எதிர்த்தார் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமைந்திருக்கிறது. கட்சி மற்றும் கொள்கைகளுக்கு அப்பால் மனிதர்களையும் நட்பையும் மதிக்கும் பண்பு க.ராசாராமிடம் இருந்தது. ஜெயபிரகாஷ் நாராயணனுடன் அவர் கடைசி வரை ஆத்மார்த்தமான நட்பைக் கொண்டிருந்தார்.
அவரது தியாக வாழ்க்கை குறித்து எழுதியிருந்தார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை மீது அவர் ஆழ்ந்த அன்பைக் கொண்டிருந்தார். அமெரிக்காவில் அண்ணாதுரை சிகிச்சை பெற்றபோது அவருடன் சென்று மகன் போன்று பணி செய்தார். பதவிகளும் புகழும் இவரைத் தேடி வந்திருக்கின்றன.
பொதுவாக பொதுவாழ்க்கையில் தேடும்போது வராதது, தேடாதபோது வந்து சேரும்; அதுதான் பொதுவாழ்க்கை.அந்தப் பொதுவாழ்க்கையில் இருக்கும் மேடு பள்ளங்களைப் புரிந்துகொண்டு, எப்போதெல்லாம் தனக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சமூகத்துக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற உணர்வோடு தன்னுடைய பொதுவாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து வந்தார் ராஜாராம்.
கடைசி காலத்தில் தீவிர அரசியலிலிருந்து அவர் ஓய்வு பெற்றபோதும், சமூகப் பணியை விடவில்லை. ஆன்மிகத்தின் மூலமாக தன்னுடைய சமூகப் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அரசியலாக இருந்தாலும் ஆன்மிகமாக இருந்தாலும் சமூகத்திற்கான தனது பங்களிப்பை அவர் தொடர்ந்து ஆற்றினார்” என்று குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார்.