

புதுடெல்லி: ரன்பீர் கபூர் - யஷ் நடித்துள்ள ‘ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’ படம் திரையிடுவதை நிறுத்த வேண்டும் என்றும், அப்படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கோரியுள்ளது.
‘ராமாயணா’ திரைப்படத்தில் ராவணனை மெச்சும் வகையில் மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளதாகவும், உண்மைகள் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச் செயலாளர் பஜ்ரங் லால் பக்ரா மற்றும் சர்வதேசத் தலைவர் அலோக் குமார் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து பஜ்ரங் லால் பக்ரா கூறுகையில், "இந்து சமூகத்தின் உணர்வுகளுடன் விளையாடும் இத்தகைய முயற்சிகளைச் சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இந்தப் படத்தில், அகல்யாவுக்கு சாப விமோசனம் அளித்தது, நிஷாதராஜன் குகனுடனான நட்பு மற்றும் கேவட்டனின் பக்தி போன்ற ராமாயணத்தின் மிக முக்கியமான நிகழ்வுகள் விடுபட்டுள்ளது.
இதற்கு மாறாக, முனிவர்கள் மற்றும் சாதுக்களின் ஆன்மிகச் செயல்பாடுகள், யாகங்கள் மற்றும் குருகுலங்களுக்குத் தடையாக இருந்த அரக்கர்களை அழிக்கும் பகவான் ராமரின் உன்னதமான பணியை, தனது மனைவி கடத்தப்பட்டதற்காகப் பழிவாங்கும் ஒரு தனிப்பட்ட போராட்டமாக இப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் ராவணனை ஒடுக்கப்பட்டவர்களின் மீட்பராகச் சித்தரிப்பதன் மூலம் ஓர் அரசியல் பிம்பத்தை உருவாக்க முயல்கிறது. ராவணனை மெச்சும் வகையில் மிகைப்படுத்தி சித்தரிப்பது இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளது" என்று அவர் கூறினார்.
இது குறித்து அலோக் குமாரும் இதேபோன்ற ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளார். "இந்தத் திரைப்படம் ராவணனை தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் மீட்பராகவும், அவர்களின் நலனுக்காக உழைப்பவராகவும் காட்டுகிறது. இதுவும் ராவணனை மிகைப்படுத்திக் காட்டும் ஒரு முயற்சியே. இந்தத் திரைப்படத்தில் பல வரலாற்று நிகழ்வுகள் சிதைக்கப்பட்டுள்ளன.
ராவணன் அறிவாளியாகவும், பக்திமானாகவும், வலிமை மிக்கவனாகவும் இருந்தபோதிலும், அவன் மக்களை ஒடுக்கியதால் ‘அறமற்றவனாகவே’ இருந்தான். ராமாயணத்தின் அனைத்துப் பதிப்புகளிலும் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்
நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில், ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ்ஷும், லட்சுமணனாக ரவி துபேவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம், நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.