

புதுடெல்லி: இந்திய விமானப்படை ‘வாயு’ என்கிற தொலைநோக்குப் பார்வையின் கீழ் செயல்படும் என புதிய விமானப்படை தளபதி அசுதோஷ் தீட்சித் தெரிவித்தார்.
இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக அசுதோஷ் தீட்சித் நேற்று முன்தினம் பதவியேற்றார். இதையடுத்து, டெல்லியில் உள்ள விமானப்படை தளத்தில் நேற்று அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், விழாவில் அவர் பேசியதாவது: எனது தலைமையில், இந்திய விமானப்படை ‘வாயு’ (VAYU) தொலைநோக்குப் பார்வையின் கீழ் செயல்படும். ‘V’ என்பது விழிப்புணர்வு மற்றும் தயார்நிலையைக் குறிக்கிறது.
ஒவ்வொரு படைப்பிரிவும், ஒவ்வொரு ரேடாரும், வான் பாதுகாப்புப் பிரிவும், ஒவ்வொரு விமானப்படை வீரருடன் சேர்ந்து, ஒரு நொடிப் பொழுதில் பதிலடி கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். ‘A’ என்பது ஆத்ம நிர்பரை (தற்சார்பு) குறிக்கிறது. நாங்கள் இந்தியத் தயாரிப்புகளை கொண்டே போரிடுவோம். ‘Y’ என்பது யுக்தி அல்லது புத்திசாலித்தனத்தைக் குறிக்கிறது. உடனடிப் பராமரிப்பு, படைப் பாதுகாப்பு, மீள்திறன், விண்வெளியைப் பயன்படுத்துதல் ஆகிய அனைத்துத் துறைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.
‘U’ என்பது ஒற்றுமையைக் குறிக்கிறது. நமது ராணுவம், கடற்படை மற்றும் தேசிய முகமைகளுடன் இணைந்து நாம் ஒன்றாகத் திட்டமிட்டுப் போராடுவோம். புதிய தொழில்நுட்பங்களும் அமைப்புகளும் போரின் தன்மையை மாற்றி வருகின்றன. இந்திய விமானப்படை அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.