

புதுடெல்லி: நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ முதன்முறையாக முழுமையாக இசைக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தபோது, 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அதே வேளையில், இந்திய விமானப் படையின் இரண்டு எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் மலர் தூவ, ஒன்றில் தேசியக் கொடியும் மற்றொன்றில் ‘வந்தே மாதரம்’ பொறிக்கப்பட்ட கொடியும் கம்பீரமாகப் பறக்கவிடப்பட்டன.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து ராணுவ இசைக்குழுவினர் ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாக இசைக்க, அதனைத் தொடர்ந்து தேசிய கீதமான ‘ஜன கண மன’ இசைக்கப்பட்டது. 150 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வந்தே மாதரம்’ பாடல், சுதந்திரத்துக்குப் பிறகு செங்கோட்டை விழாவில் இசைக்கப்பட்டது இதுவே முதன்முறை எனப் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் சுதேசி இயக்கத்தின் பேரெழுச்சிப் பாடலாக விளங்கிய வந்தே மாதரத்துக்கு, தேசிய கீதத்துக்கு இணையான சட்டப் பாதுகாப்பை வழங்கும் ‘தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா 2026’ நாடளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இச்சட்டத் திருத்தத்தின்படி, வந்தே மாதரம் பாடலைத் தடுப்பதோ அல்லது அவமதிப்பதோ சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கக்கூடிய குற்றமாகும்.
முன்னதாக, பங்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்டு ‘ஆனந்தமத்’ நாவலில் இடம்பெற்ற இப்பாடல், 1896 கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூரால் முதன்முறையாகப் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.