

ஆம்ஸ்டல்வீன்: உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நேற்று தொடங்கியது. 16 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய ஆடவர் அணி நேற்று தனது முதல் லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் சஞ்ஜய் அடித்த கோல் காரணமாக இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதன் பின்னர் 11 மற்றும் 43-வது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்றினார். வேல்ஸ் அணி தரப்பில் 56-வது நிமிடத்தில் சாம் வெல்ஷ் ஒரு கோல் அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (17-ம் தேதி) இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. தொடர்ந்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் 19-ம் தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது இந்திய அணி. ‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறியதாவது:
நாங்கள் நன்றாக விளையாடினோம். வாய்ப்புகளை உருவாக்கி கோல்கள் அடிப்பதே எங்கள் இலக்காக இருந்தது. யார் ஆட்டநாயகன் விருது பெறுகிறார்கள் அல்லது யார் கோல் அடிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. எங்களுக்கு கோல்கள் மட்டுமே தேவை. அந்த எண்ணத்துடன்தான் விளையாடினோம்,
தொடரை வெற்றியோடு தொடங்குவது முக்கியமாக இருந்தது. நாங்கள் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று மூன்று புள்ளிகளைக் கைப்பற்றி உள்ளோம். எங்களால் முடிந்தவரை சிறப்பாகச் செயல்பட்டோம். ஆனால் வேல்ஸ் அணி வீரர்களும் நன்றாக விளையாடினார்கள். இது முதல் போட்டி மட்டுமே, வரும் போட்டிகளில் தவறுகளைத் தவிர்க்க முயற்சி செய்வோம்.
எங்கள் முன்கள ஆட்டக்காரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு பல பெனால்டி கார்னர் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தனர். அவர்கள் ஃபீல்ட் கோல்கள் அடித்தாலும் அல்லது பெனால்டி கார்னர்களை உருவாக்கினாலும், அணிக்கு கோல்கள் மட்டுமே முக்கியம். தற்போது அணியின் கவனம் உலகக்கோப்பையை வெல்வதில்தான் உள்ளது. இவ்வாறு ஹர்மன்பிரீத் சிங் கூறினார்.
இந்தியா - சீனா இன்று மோதல்
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் மகளிர் பிரிவில் இன்று ‘டி’ பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, சீனாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. உலகத் தரவரிசையில் இந்திய மகளிர் அணி 9-வது இடத்திலும், சீனா 2-வது இடத்திலும் உள்ளன.