ஆதரவற்ற முஸ்லிம் பெண்களுக்கு இலவச குடியிருப்பு வழங்க உத்தராகண்ட் அரசு முடிவு

ஆதரவற்ற முஸ்லிம் பெண்களுக்கு இலவச குடியிருப்பு வழங்க உத்தராகண்ட் அரசு முடிவு
Updated on: 
1 min read

புதுடெல்லி: முத்தலாக், நிக்காஹ் ஹலாலா உள்ளிட்ட நடைமுறைகளால் பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற முஸ்லிம் பெண்களுக்கு இலவச குடியிருப்புகளை வழங்க உத்தராகண்ட் அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் உத்தராகண்ட் வஃக்பு வாரியம் மூலமாக அமல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து உத்தராகண்ட் வஃக்பு வாரியத் தலைவர் ஷதாப் ஷம்ஸ் கூறும்போது, “முத்தலாக் மற்றும் ஹலாலா போன்ற நடைமுறைகளால் பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இலவச வீடுகளை வழங்குவதற்கான திட்டத்தை வாரியம் உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரியத்துக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் தேவைப்படும் பெண்களுக்குப் பயன்படுத்தப்படும். வாரியத்தின் நிலத்தில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

அதைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட நிலம் மற்றும் கட்டிடங்கள் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சகோதரிகளுக்கு உரிய உரிமைகள் உறுதி செய்யப்படும்” என்றார்.

பொதுவாக முஸ்லிம் சமூகத்தில் முத்தலாக் நடைமுறைக்குப் பிறகு கணவர் பெரும்பாலும் மறுமணம் செய்து கொள்கிறார். இதன் விளைவாக, பாதிக்கப்பட்ட பெண்கள் வேதனையை அனுபவிப்பதோடு, ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இத்திட்டம் அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கும் என பாஜக ஆளும் உத்தராகண்ட் அரசு எதிர்பார்க்கிறது.

இந்த முயற்சியின் மூலம், முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப்பட்ட பெண்களை சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைப்பதையும், அவர்களுக்குப் பாதுகாப்பான இருப்பிடத்தை வழங்குவதையும் அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே மத்திய அரசு சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ள முத்தலாக் முறையை, பொது சிவில் சட்டம் மூலமாகவும் உத்தராகண்ட் அரசு தடை செய்துள்ளது.

எனினும், இதுவரையில் முத்தலாக்கால் பாதிப்புக்குள்ளான முஸ்லிம் பெண்கள் பலர் இன்றும் உள்ளனர். இவர்களுக்காகவே இத்திட்டம் தற்போது முன்மொழியப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் பாஜக அரசு பொது சிவில் சட்டத்துக்கு முஸ்லிம்கள் இடையே கிளம்பும் எதிர்ப்பையும் சமாளிக்க முயல்வதாகக் கருதப்படுகிறது.

ஆதரவற்ற முஸ்லிம் பெண்களுக்கு இலவச குடியிருப்பு வழங்க உத்தராகண்ட் அரசு முடிவு
தலைமை காவலரை சுட்டுக் கொன்ற மகன் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in