தலைமை காவலரை சுட்டுக் கொன்ற மகன் கைது

தலைமை காவலரை சுட்டுக் கொன்ற மகன் கைது
Updated on: 
1 min read

சண்டிகர்: சண்டிகர் காவல் துறை தலைமையகத்தின் கணக்குப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவர் நிதின் சிங். இவர், தனது அரசு குடியிருப்பில் தலையில் குண்டு காயங்களுடன் நேற்று முன்தினம் காலை சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கியைக் கைப்பற்றினர். இது தொடர்பாக நிதின் மகன் அர்மானைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதகுறித்து போலீஸார் கூறியதாவது:

நிதின் சிங்கின் 18 வயது மகன் அர்மான், தனது காதலியை உடனடியாகத் திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் தகராறு செய்துள்ளான். ஆனால், ஆண்களுக்குத் திருமண வயது 21 என்பதால், அதுவரை காத்திருக்குமாறு கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அர்மான், கடந்த வியாழக்கிழமை மாலை திருமணத்துக்காக ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளான். ஆனால் பணம் தர மறுத்துள்ளனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலையில் தந்தை நிதின் சிங்கை நாட்டுத் துப்பாக்கியால் அர்மான் சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. தந்தையைக் கொன்றதுடன் தாயின் கழுத்தை நெரிக்கவும் அர்மான் முயன்றுள்ளான். அங்கிருந்து தப்பிய தாய் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வந்து போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தலைமை காவலரை சுட்டுக் கொன்ற மகன் கைது
இன்று மாதா அமிர்தானந்தமயி பிறந்தநாள் விழா தொடக்கம்: சி.பி.ராதாகிருஷ்ணன், அமித் ஷா பங்கேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in