

பாட்னா: பிஹார் பெண்கள் பற்றி தரக்குறைவாக பேசிய உத்தராகண்ட் அமைச்சரின் கணவருக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உத்தராகண்ட் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா. இவரது கணவர் கிரிதாரி லால் சாகு. இவர் இளைஞர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என கேட்டுள்ளார். அதன்பின் திருமணத்துக்கு ரூ.20,000 முதல் ரூ.25,000 செலவில் பிஹார் பெண்கள் கிடைப்பார்கள் என கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாக பரவியதால் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராஷ்ட்ரிய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் சித்ரஞ்சன் ககன் கூறுகையில், ‘‘உத்தராகண்ட் அமைச்சரை டிஸ்மிஸ் செய்து அவரது கணவரை பாஜக.வில் இருந்து நீக்க வேண்டும். பாஜக.வில் நெறிமுறை மற்றும் மரியாதை என்பது கொஞ்சம் கூட இல்லை. பிஹார் பெண்கள் பற்றி இழிவாக பேசப்பட்டதை பிஹார் பொறுத்துக் கொள்ளாது. இதற்காக பாஜக மன்னிப்பு கேட்டு, இழிவாக பேசிய கிரிதாரி லால் சாகு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர் கூறுகையில், ‘‘பிஹார் பெண்கள் விற்பனைக்கு அல்ல. பிஹார் பெண்களை ஏன் குறைத்து மதிப்பிட வேண்டும்? நிதின் நபின் பிஹார் மாநில தலைவர் என்பதால், அவர் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தே.ஜ கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தள எம்.பி ஜன்ஜர்பூர் ராம்பிரிட் மண்டல் கூறுகையில், ‘‘பெண்களை இழிவுபடுத்துவதை பிஹார் பொறுத்துக் கொள்ளாது. கிரிதாரி லால் சாகு மன்னிப்பு கேட்காவிட்டால், நாங்கள் நீதிமன்றத்துக்கு செல்வோம்” என்றார்.
பிஹார் மாநில பாஜக ஊடகப் பிரிவு தலைவர் டானிஷ் இக்பால் கூறுகையில், ‘‘இந்தக் கருத்தை பாஜக முற்றிலும் நிராகரிக்கிறது. பெண்களுக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் அது முறையற்றது. இது பாஜக கலாச்சாரம் அல்ல” என்றார்.