

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் ஒரு கோடி பெண்களுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ.1 லட்சம் அளிக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது. ‘பெண்கள் தொழில்முனைவோர் கடன் திட்டம்’ சார்பில் ரூ.20,000 வரை மானியம் அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பெண்களைக் கவரும் திட்டங்கள் அமலாகி வருகின்றன. இந்த வகையில், உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பெண்களைக் கவரும் வகையில் ஒரு திட்டத்தை அமலாக்க பாஜக அரசு தயாராகி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மகளிர் சுயஉதவிக் குழுக்களுடன் இணைந்துள்ள ஒரு கோடி பெண்கள் ரூ.1 லட்சம் வரையிலான கடன் பெற முடியும்.
உ.பி.யின் வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ‘உத்யமேஸ்வரி கடன் திட்டம்’ உள்ளது. இத்திட்டத்தின் கீழ், தனது தேர்தல் உத்தியின் ஒரு பகுதியை அமலாக்க உ.பி. அரசு தயாராகிறது. 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில், வட்டியில்லாக் கடனாக ரூ.1 லட்சம் வழங்க உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்பாக இதற்கான சிறப்புக் கடன் அட்டைகள் ஒரு கோடி பெண்களுக்கு வழங்கப்பட உள்ளன. பெண்கள் இத்தொகையைக் கொண்டு சிறு தொழிலைத் தொடங்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்தலாம். முதல் கட்டத்தில் வழங்கப்பட்ட 20,000 ரூபாயைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினால், 2-ம் கட்டத்தில் 30,000 ரூபாய் கடன் வழங்கப்படும்.
இரண்டாம் கட்டத் தவணையையும் திருப்பிச் செலுத்தினால், மூன்றாம் கட்டத்தில் 50,000 ரூபாய் கடன் வழங்கப்படும். இதற்கான வரைவுத் திட்டத்தை வங்கிகள் தயாரித்துள்ளன. அதற்கான விரிவான திட்ட முன்மொழிவை சம்பந்தப்பட்ட ஊரகவளர்ச்சித் துறை தயாரித்து வருகிறது. இந்தத் தொகையான ரூ.1 லட்சத்தில் பெண்கள், பசுக்கள் மற்றும் எருமைகளை வாங்கிப் பலன் பெறலாம்.
சுயஉதவிக் குழுக்களின் பெண்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள தரமான மின்-ரிக் ஷாக்களை வழங்குவதற்கும் ஒரு திட்டம் தயாராகி வருகிறது. இதுபோன்ற பெண்களுக்கான சுயஉதவிக் குழுக்கள் திட்ட அறிவிப்பினால்தான் பிஹார் சட்டப்பேரவைத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி மீண்டும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.