

புதுடெல்லி: கடந்த 1971, பிப்ரவரி 2-ல் ஈரானின் ராம்சார் நகரில் ஒரு சர்வதேச மாநாடு நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள ஈர நிலங்களைப் பாதுகாக்க நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் சுமார் 170 நாடுகள் பங்கேற்று ஒப்பந்தம் கையெழுத்திட்டன. இது 1975, டிசம்பர் 21-ல் நடைமுறைக்கு வந்தது.
இந்த மாநாட்டின்படி, நீரோட்டம் கொண்ட, பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு இயற்கையான வாழ்விடங்களை வழங்குகின்ற மற்றும் பல்லுயிர் பெருக்கத்துக்கான சாத்தியக் கூறுகளை கொண்ட ஈர நிலங்கள் ராம்சார் பட்டியலுக்கு தேர்வு செய்யப்படுகின்றன. இந்தியாவின் ராம்சார் தளங்கள் பட்டியலில் தமிழ்நாடு 20 தளங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து 12 தளங்களுடன் உ.பி. 2-ம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் ராம்சார் தளங்கள் எண்ணிக்கையில் தமிழ்நாட்டை மிஞ்சி முதலிடம் பிடிப்பதை உ.பி. நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு சாத்தியமான ஈரநிலங்களை கண்டறியும் ஒரு பிரச்சாரத்தை முதல்வர் யோகி ஆதித்ய நாத் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த மாநிலத்தின் பெரிய குளங்களும் ஏரிகளும் உலகளாவிய அங்கீகாரத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. ஈரநிலப் பாதுகாப்புப் போட்டியில் தற்போது ஒரு பெரிய உந்துதலைப் பெற உ.பி. தயாராகி வருகிறது.
உ.பி.யின் அலிகரில் உள்ள ஷேகா ஏரி சமீபத்தில் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து உ.பி.யின் பலியாவில் உள்ள சுர்ஹதால் பறவைகள் சரணாலயம் விரைவில் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல மாவட்டங்களின் முன்மொழிவுகளும் ராம்சார் பட்டியலில் சேர்ப்பதற்காக தயார் செய்யப்பட்டு வருகின்றன. உ.பி.யின் புவியியல் அமைப்பும், கங்கை- யமுனா தோவாப் பகுதியில் உள்ள பரந்த ஈர நிலங்களும் இத்துறையில் மாநிலத்தை ஒரு முன்னோடியாக மாற்றக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
தற்போது, இந்தியாவில் 99 ராம்சார் தளங்கள் உள்ளன. தமிழ்நாடு, உ.பி.க்கு பிறகு பஞ்சாப், ஒடிசா மற்றும் பிஹாரில் தலா 6 ராம்சார் தளங்கள் உள்ளன.
நான்காவது இடத்தில் தலா 5 தளங்களுடன் குஜராத், ராஜஸ்தான், ம.பி. மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளன. ராம்சார் தளம் பல்லுயிர் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு வலசை செல்லும் பறவைகளுக்கு பாதுகாப்பான வாழ்விடத்தையும் உறுதி செய்கிறது.