

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
புதுடெல்லி: வாரணாசியில் நேற்று காசி தமிழ் சங்கமம் 5.0 விழாவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், பகவத்கீதையுடன் திருக்குறளை ஒப்பிட்டார்.
“கங்கையின் ஞான மரபும், தமிழின் அமுத மரபும் காசியில் இணையும்போது, இந்தியத் தேசத்தின் உணர்வு விழித்தெழுகிறது.
காசியும் தமிழ்நாடும் இந்திய கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் இரண்டு பழமையான, அழியாத நீரோடைகள். பல நூற்றாண்டுகளாக, இவை இரண்டும் ஒன்றையொன்று செழுமைப்படுத்திக் கொண்டு, தங்களின் மரபுகள், நம்பிக்கைகள் மற்றும் கலாச்சார உணர்வுகளை வளர்த்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள தென்காசி, இந்த நெருக்கமான பிணைப்பிற்கு ஒரு வாழும் சான்றாகும். ‘காசி தமிழ் சங்கமம்’ என்பது இந்தியாவின் அழியாத மரபின் கொண்டாட்டமாக மாறியுள்ளது.
இதில் மொழிகள் வேறாக இருந்தாலும், ஆன்மா ஒன்றே. மரபுகள் பலதரப்பட்டவை, ஆனால் கலாச்சாரம் ஒன்றே. இந்தச் சங்கமத்திற்கு, திருக்குறள் பயில்வோம் கருப்பொருளாகி உள்ளது. இது தமிழின் காலத்தால் அழியாத ஞானத்துடனும் விழுமியங்களுடனும் இணைவதற்கான வாய்ப்பை வழங்கும்.
திருவள்ளுவரின் குறள்கள் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்குமான வாழ்க்கை தத்துவத்தை வழங்குகின்றன. அறம், பொருள், இன்பம் ஆகிய அதன் மூன்று பிரிவுகளும் இந்தியாவின் அழியாத மரபின் அடிப்படையாகும். பிறப்பால் அனைவரும் சமமானவர்களே; செயல்களால் மட்டுமே வேறுபாடுகள் ஏற்படுகின்றன.
திருக்குறளின் முதல் குறள், ‘அ’ என்ற எழுத்தின் மூலம் படைப்பின் தொடக்கத்தை உணர்த்துகிறது. இந்தச் சிந்தனை, உபநிடதங்களிலும் பகவத் கீதையிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள அழியாத தத்துவத்தோடு நம்மை இணைக்கிறது.
பிறப்பால் அனைவரும் சமம் என்றும், செயல்களால் மட்டுமே வேறுபாடுகள் ஏற்படுகின்றன என்றும் திருவள்ளுவர் கூறுகிறார். பகவத்கீதையும் பிற இந்தியச் சாஸ்திரங்களும் இதையே வலியுறுத்துகின்றன.
ஆதி சங்கராச்சாரியார் இந்தியாவின் நான்கு திசைகளிலும் நான்கு பீடங்களை நிறுவி, ஒட்டுமொத்த நாட்டையும் கலாச்சார ஒற்றுமை எனும் நூலால் பிணைத்தார். தென்னகத்திலிருந்து வந்த ஜகத்குரு ராமானுஜ ஆச்சார்யர், பக்தி எனும் நீரோட்டத்தை ஒவ்வொரு இல்லத்திற்கும் கொண்டு சேர்த்தார்.
17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் காசிக்கு வந்து, கங்கையின் கரைகளில் ஒன்றான கேதார் காட்டில் தவம் செய்தார். அவர் அங்கு குமார சுவாமி மடத்தை நிறுவினார். அவரது மரபைப் பின்பற்றி, தமிழ்நாட்டின் திருப்பனந்தாளில் ‘காசி மடம்’ நிறுவப்பட்டது.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காசியில் கல்வி பயின்றார்; அங்குதான் அவரது தேசபக்தி மேலும் கூர்மையடைந்தது. கேதார் காட், அனுமன் காட் மற்றும் ஹரிச்சந்திர காட் ஆகிய இடங்களில் தமிழ் கலாச்சாரம் இன்றும் உயிர்ப்புடன் திகழ்கிறது.
சுமார் 200 ஆண்டுகளாக, பாபா விஸ்வநாதரின் வழிபாட்டிற்குத் தேவையான பொருட்களை நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினர் வழங்கி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு மாதமும் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணியிலிருந்து கொண்டுவரப்படும் நீரைக் கொண்டு ராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்கின்றனர்.
ஸ்ரீ ராமநாத சுவாமி கோயிலில் உள்ள கோடித்தீர்த்த நீரைக்கொண்டும் அபிஷேகம் செய்கின்றனர். காசியில் உள்ள கேதார் காட், அனுமன் காட் மற்றும் ஹரிச்சந்திர காட் ஆகிய இடங்களில் தமிழ் கலாச்சாரம் துடிப்பான முறையில் வெளிப்படுகிறது.
இந்த இடங்கள் காசியின் ‘சிறு தமிழ்நாடு’ என்றும் அழைக்கப்படுகின்றன. புதிய நாடாளுமன்றத்தில், அதிகார மாற்றத்தின் அடையாளமாக ‘செங்கோல்’ நிறுவப்பட்டதன் மூலம், நாட்டின் அதிகாரச் சின்னத்தில் தமிழ்ப் பாரம்பரியம் பொறிக்கப்பட்டுள்ளது.
காசி, அறிவு, ஆன்மிகம், இசை மற்றும் விவாதங்களுக்கான உலகத் தலைநகராக மாறியிருக்க முடியும். பல்வேறு மொழிகள், பிரிவுகள் மற்றும் பகுதிகளைச் சேர்ந்த மக்களை வரவேற்கும் காசி, அறிவு, ஆன்மிகம், இசை மற்றும் விவாதங்களுக்கான உலகத் தலைநகராக திகழ்ந்திருக்க வேண்டிய இடம்.
ஆனால், சுதந்திர இந்தியாவில் இவ்வளவு காலம் இந்த நகரம் ஏன் புறக்கணிக்கப்பட்டது? முன்பு அங்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் முறையான கட்டமைப்பு இல்லை; மக்கள் கூட்டம் இருந்தது. ஆனால் போதிய வசதிகள் இல்லை. வாய்ப்புகள் இருந்தன, ஆனால் முன்னேறுவதற்கான உறுதியான தீர்மானம் இல்லை. ஆனால் இன்று, நம்பிக்கையுடன் முறையான கட்டமைப்பும் இணைந்துள்ளது. பிரம்மாண்டமாகவும், தெய்வீகமாகவும் புனரமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 26 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வந்துள்ளனர்.
இதில் 70 சதவீதத்தினர் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள். பக்தர்களின் இந்த வருகை உள்ளூர் பொருளாதாரத்திற்குப் பெரும் ஊக்கமளித்துள்ளது. இதன் விளைவாக 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருளாதார நடவடிக்கைகள் விரிவடைந்துள்ளன.
பூசாரிகள், கடைக்காரர்கள், படகோட்டிகள், ஹோட்டல் பணியாளர்கள் மற்றும் வழிகாட்டிகள் எனப் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் இதனுடன் பிணைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.