

புதுடெல்லி: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 130 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்கும் நிலையில், அதற்கு 26 தொகுதிகளை மட்டும் ஒதுக்க சமாஜ்வாதி முன்வந்துள்ளது. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.
அடுத்த வருடம் வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து போட்டியிடத் திட்டமிட்டுள்ளன. இதற்கான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.
எனினும், இதில் உடன்பாட்டை எட்டுவதில் சிக்கல் நீடிக்கிறது. தமது அரசியல் செல்வாக்கு மற்றும் 2024 மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் அதிக இடங்களைக் காங்கிரஸ் கோருகிறது. ஆனால், சமாஜ்வாதி கட்சியோ 2022 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தொகுதிகளை ஒதுக்க விரும்புகிறது.
இன்றைய இரண்டாவது நாள் பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளுக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. 130 தொகுதிகளை காங்கிரஸ் கேட்க, வெறும் 26 தொகுதிகளை அளிக்க சமாஜ்வாதி முன்வந்துள்ளது.
சமாஜ்வாதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு விவாதத்தில், ரேபரேலி மற்றும் அமேதி ஆகிய இரண்டு மாவட்டங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த இரண்டு மாவட்டங்களும் காந்தி குடும்பத்தின் அரசியல் அடையாளத்துடன் தொடர்புடையவை மற்றும் அவர்களின் வலுவான கோட்டைகளாகக் கருதப்படுபவை.
ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியின் மக்களவை எம்பியாக உள்ளார். காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான கே.எல். சர்மா அமேதி தொகுதியின் எம்பியாக உள்ளார்.
காந்தி குடும்பத்தின் செல்வாக்கு மிக்க இந்த மாவட்டங்களில், காங்கிரஸைப் புறக்கணிக்கும் வகையில் சமாஜ்வாதி கட்சியின் நடவடிக்கை உள்ளது. சமாஜ்வாதி அளித்த பட்டியலில் காங்கிரஸுக்கு ரேபரேலியில் ஒரு தொகுதிகூட ஒதுக்கப்படவில்லை. அமேதி மாவட்டத்தில் ஜகதீஷ்பூர் தொகுதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இதனால், உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் இணைந்து போட்டியிடத் தயாராகும் சமாஜ்வாதியும் காங்கிரஸும், தொகுதிப் பங்கீடுகளில் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் கட்சி 181 தொகுதிகள் அடங்கிய நீண்ட பட்டியலைச் சமாஜ்வாதி கட்சியிடம் சமர்ப்பித்திருந்தது.
பின்னர், அந்த எண்ணிக்கையைக் குறைத்து சுமார் 130 தொகுதிகளைக் கோரியது. இருப்பினும், சமாஜ்வாதி கட்சி காங்கிரஸுக்கு வெறும் 26 இடங்களை மட்டுமே வழங்க முன்வந்துள்ளது. இதில் இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது, நான்கில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது.
மீதமுள்ள 20 இடங்களில் சமாஜ்வாதி கட்சி 60,000 முதல் 70,000 வாக்குகள் வரை பெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சி வெறும் 2,000 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
ரேபரேலி மற்றும் அமேதியில் உள்ள பத்து தொகுதிகளில் எட்டு தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோருகிறது. இவற்றை வெறும் இரண்டு மாவட்டங்களாக மட்டும் பார்க்காமல், அவை உ.பி.யில் தங்கள் அரசியல் அடையாளமாக காங்கிரஸ் கருதுகிறது.
காங்கிரஸ் கோரும் 130 தொகுதிகளுக்கும், சமாஜ்வாதி கட்சி முன்வைக்கும் 26 தொகுதிகளுக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. சமாஜ்வாதி கட்சியின் இந்த முன்மொழிவில், 2022 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள், அக்கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்த சில தொகுதிகள் மற்றும் பிற சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும்.
காங்கிரஸ் கோரும் தொகுதிகளில் தங்களுக்கு வலுவான வேட்பாளர்கள் இருப்பதோடு, வெற்றி வாய்ப்பும் அதிகமாக இருப்பதாக சமாஜ்வாதி கட்சி தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், 2024 மக்களவைத் தேர்தலில் காட்டிய செயல்பாட்டின் அடிப்படையில் காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளைக் கோருகிறது. மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணி தங்களுக்குப் பயனளித்ததாகவும், அதன் மூலம் ஆறு தொகுதிகளை வென்றதாகவும் காங்கிரஸ் வாதிடுகிறது.
சமாஜ்வாதி அளிக்கும் 26 என்பது இன்னும் இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீடு அல்ல. என்றாலும், சமாஜ்வாதி கட்சி ஒருவித அழுத்த அரசியலைக் கையாள்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், இந்த எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.