

புதுடெல்லி: அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோர் மீதான அனைத்து கிரிமினல் குற்றச்சாட்டுகளையும் அமெரிக்க நீதித்துறை நிரந்தரமாக ரத்து செய்துள்ளது.
அதானி குழுமம் இந்தியாவில் உள்ள சூரிய மின்சக்தி திட்டங்கள் தொடர்பாக முதலீட்டாளர்களுக்குத் தவறான தகவல்களை அளித்ததாகக் கூறி, அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், அமெரிக்க நீதித்துறையானது நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘இந்த வழக்கை நாங்கள் விரிவாக ஆய்வு செய்தோம்.
தனிப்பட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகளுக்காக இனிமேலும் எங்களது அரசுத் துறை வளங்களை வீணடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோருகிறோம்’’ என்று தெரிவித்தது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அதானி மற்றும் பிறருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரந்தரமாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன்மூலம், அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்காவில் நடந்து வந்த பல்வேறு ஒழுங்குமுறை மற்றும் சட்டரீதியான விசாரணைகள் அனைத்தும் முழுமையாக முடிவுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, மும்பை பங்குச் சந்தையில் நேற்று அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக உயர்ந்தன.