

அமெரிக்க தூதர் செர்கியோ கோர்
புதுடெல்லி: இந்தியாவைவிட முக்கியமான நட்பு நாடு வேறு எதுவும் இல்லை என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்கியோ கோர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தினார். இதை ஏற்க மறுத்த நிலையில், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அதிபர் ட்ரம்பை சந்திப்பதை பிரதமர் மோடி தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டிருந்த செர்கியோ கோர் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: “நான் அதிபர் ட்ரம்ப் உடன் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளேன். பிரதமர் மோடியுடனான அவரது நட்பு உண்மையானது. உண்மையான நண்பர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இறுதியில் அவர்கள் அந்த வேறு பாடுகளை பேசித் தீர்த்துக்கொள்வார்கள்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதே எனது நியமனத்தின் நோக்கம். மேலும் அடுத்த ஆண்டில் ட்ரம்ப் இந்தியாவுக்கு வருவார் என்று நம்புகிறேன். இந்தியாவை விட முக்கியமான நட்பு நாடு வேறு எதுவும் இல்லை. இந்தியா உலகின் மிகப்பெரிய நாடு (மக்கள் தொகையில்).
எனவே, இரு நாடுகளுக்கு இடையிலான தாராள வர்த்தக ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிப்பது எளிதான காரியம் அல்ல. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக இறுதிக் கட்டத்துக்கு கொண்டு செல்வதில் இரு நாடுகளும் உறுதியாக உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.