புதுடெல்லி: இந்தியாவில் மின்னணு பணப் பரிவர்த்தனையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய யுபிஐ தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதன் பிரம்மாண்டமும் பயனும் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “பத்து ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ, இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைப் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. யுபிஐ-ன் பிரம்மாண்ட அளவும் அது சென்றடைந்த பரந்த எல்லையும், ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படக்கூடிய விஷயமாகும். என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், உங்கள் யுபிஐ அனுபவம் குறித்தும் அது உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
யுபிஐ தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் மின்னணு பணப் பரிவர்த்தனை தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. 2016 ஆகஸ்ட் 25 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம், நிதிச் சேவையை அனைவருக்கும் கொண்டு சேர்த்ததில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
2016 – 17-ம் நிதியாண்டில் வெறும் 1.78 கோடியாக இருந்த ஆண்டு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை, 2025 - 26-ம் நிதியாண்டில் 24,162 கோடிக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது பரிவர்த்தனை எண்ணிக்கையில் சுமார் 13 ஆயிரம் மடங்கு அதிகமாகும்.
அதேபோல் பரிவர்த்தனை மதிப்பு 2016 – 17-ம் நிதியாண்டில் ரூ.0.07 கோடியாக இருந்த நிலையில், 2025 – 26-ம் நிதியாண்டில் ரூ.314 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது பரிவர்த்தனை மதிப்பில் 4 ஆயிரம் மடங்கிற்கும் அதிகமாகும்.
நாட்டின் மின்னணு பொது உட்கட்டமைப்பின் மிகவும் வெற்றிகரமான தூண்களில் ஒன்றாக யுபிஐ உருவெடுத்துள்ளது. இது பல்வேறு அமைப்புகளுக்கிடையே செயல்படக்கூடிய நிகழ்நேர பணப் பரிவர்த்தனை தளத்தை அளிக்கிறது. இதன்மூலம் செயலி வழியாக தனிநபர்களிடையேயான மற்றும் தனிநபர் – வணிகர் இடையேயான பரிவர்த்தனைகளை தடையின்றி மேற்கொள்ள முடிகிறது.
தற்போது லட்சக்கணக்கான பயனர்களின் விருப்பக் கட்டண முறையாக இது மாறியுள்ளது. அத்துடன் நாட்டின் பணப் பரிவர்த்தனை முறையையும் மாற்றியமைத்துள்ளது.
மின்னணு இடைவெளியை குறைத்தல், நிதி சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல், மின்னணு நிதிச் சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம், நாடு முழுவதும் தனி நபர்களையும், சமூகங்களையும் யுபிஐ வலுப்படுத்தியுள்ளதுடன், பரவலான பொருளாதார பங்கேற்பையும் ஊக்குவித்துள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.