

லக்னோ: உத்தர பிரதேசத்தில் ரீல்ஸ் எடுப்பதற்காக மேல்நிலை தண்ணீர் தொட்டி மீது ஏறி, இறங்க முடியாமல் தவித்த இளைஞர்கள் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு பழைய மேல்நிலை தண்ணீர் தொட்டியின் மீது நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் 5 இளைஞர்கள் ஏறி உள்ளனர். சமூக வலைதளத்திற்காக ‘ரீல்ஸ்' எடுக்க அந்தத் தண்ணீர் தொட்டியின் மீது ஏறியுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டியின் ஏணி உடைந்ததில் 3 பேர் கீழே விழுந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார், காயமடைந்த இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 2 பேர் தொட்டியின் உச்சியில் சிக்கிக் கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர், கூடுதல் மாவட்ட ஆட்சியர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். மின்சாரத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் இந்த மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனாலும் சுமார் 16 மணி நேரம் போராடியும் அவர்களை மீட்க முடியவில்லை.
இதையடுத்து மாநில அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, விமானப்படைக்கு சொந்தமான ஐஏஎப் Mi-17 V5 ஹெலிகாப்டர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அதிகாலை 5:20 மணியளவில் கான்ஷிராம் அவாசி காலனியை அடைந்த ஹெலிகாப்டர், வெறும் 15 நிமிடங்களில் அந்த இளைஞர்களை மீட்டது. பின்னர் அவர்கள் கோரக்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.