

ஆதிலாபாத்: உத்தரபிரதேச மாநிலம் அலிகரை சேர்ந்த அமன் என்ற 24 வயது இளைஞர், தமிழக முதல்வர் விஜய்யை சந்திப்பதற்காக அங்கிருந்து தமிழ்நாடு வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஜூலை 3-ம் தேதி அலிகரில் தனது பயணத்தை தொடங்கிய அமன், சுமார் இரண்டு வாரத்துக்கு பிறகு தெலங்கானாவின் ஆதிலாபாத் மாவட்டத்தை நேற்று முன்தினம் வந்தடைந்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சிக்காக முதல்வர் விஜய்க்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்.
இதுபோன்ற வளர்ச்சி சார்ந்த அணுகுமுறையை கொண்ட தலைவர்கள் அதிகம் உருவானால் இந்தியா பயன்பெறும். முதல்வர் விஜய் தேசிய அரசியலில் பங்காற்ற வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்தார். அமன் கடந்த 2025-ல் ஏஐஎம்ஐஎம் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசியை சந்திக்க அலிகரில் இருந்து ஹைதராபாத்துக்கு நடைபயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் மக்கள் தனக்கு உணவு, குடிநீர் மற்றும் தற்காலிக தங்குமிடம் வழங்கி உதவியதுடன் பலரும் தன்னை ஊக்குவித்து, தனது பயணத்தின் நோக்கம் குறித்து கேட்டறிந்ததாக குறிப்பிட்டார்.