

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே அமைந்துள்ளது. இதில் சுல்தான்பூர் சாலையில் ஒரு சுங்கச் சாவடிக்கு முன்னதாக புதிதாக மணமான ஒரு தம்பதி காரில் தனிமையில் இருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதைப் பார்த்த தம்பதி கடந்த அக்டோபரில் முதல்வருக்கு புகார் கடிதம் அனுப்பினர்.
ஆதித்யநாத்தின் உத்தரவின்படி சுல்தான்பூர் போலீஸார் விசாரணையில் இறங்கினர். அப்போது கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்களின் காதல் காட்சிகளைப் பதிவு செய்தது தெரியவந்துள்ளது. இக்காட்சிகளில் சிக்கிய சிலரிடம் மிரட்டி பணம் பறித்ததும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக சுங்கச்சாவடி போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (ஏடிஎம்எஸ்) மேலாளர் அசுதோஷ் சர்க்கார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், ‘‘நான் யாருடைய அந்தரங்க காட்சிகளின் பதிவுகளை வெளியிடவில்லை. சுங்கச்சாவடி முன்னாள் ஊழியர் ஒருவர்தான் தனிப்பட்ட பார்வைக்காக என்னிடம் கொடுத்தார்’’ என்று அசுதோன் தெரிவித்துள்ளார். அந்த முன்னாள் ஊழியர், ஓட்டுநர் ஒருவரிடம் கொடுத்துள்ளார். அவர் மூலமாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இந்த வழக்கில் விரைவுசாலை போக்குவரத்து மேலாண்மை அமைப்புக்கு பொறுப்பான சூப்பர் வேவ் கம்யூனிகேஷன்ஸ் அண்ட் இன்ப்ரா சொல்யூஷன்ஸ் நிறுவனம், மேலும் 3 அலுவலர்களை பணி நீக்கம் செய்துள்ளது. நான்கு பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் சுல்தான்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குன்வர் அனுபாம் சிங் கூறுகையில், ‘‘விரைவு சாலையின் ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை சிசிடிவி கேமராக்கள் மூலம் ஜும் செய்து பார்ப்பது வழக்கம். அப்போது தவறான நடவடிக்கைகள் இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உதவும். இது போன்ற நடவடிக்கையின் போதுதான் காதல் காட்சிகளையும் பதிவு செய்து தவறாகப் பயன்படுத்தி உள்ளனர்’’ என்றார்.