

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் ஆண்டுதோறும் காலண்டர்கள், பஞ்சாங்கம், டைரிகளை அச்சிட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இவை பிரம்மோற்சவத்தின் போதே முதல்வரால் வெளியிடப்பட்டு விடும். அப்போது முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புத்தக விற்பனை மையங்களில் இவை விற்பனைக்கு வைக்கப்படும்.
திருமலையில் முக்கிய இடங்கள், திருப்பதியில் அனைத்து தேவஸ்தான கோயில்கள், புத்தக விற்பனை மையங்களில் இவை விற்கப்படுகின்றன. இந்த ஆண்டு, 12 பக்க காலண்டர்கள் 13 லட்சம், 6 பக்க காலண்டர்கள் 75,000, பெருமாள் மட்டும் உள்ள காலண்டர்கள் 2.5 லட்சம், பத்மாவதி தாயார் மட்டும் உள்ள காலண்டர்கள் 10 ஆயிரம், இருவரும் உள்ள காலண்டர்கள் 3 லட்சம், சிறிய டைரி 3 லட்சம், பெரிய டைரிகள் 8.50 லட்சம், டேபிள் டாப் காலண்டர்கள் 1.50 லட்சம் அச்சிடப்பட்டன.
தற்போது ஆங்கில புத்தாண்டு நெருங்குவதை முன்னிட்டு இவற்றின் விற்பனையும் படுஜோராக நடைபெற்று வருகிறது.
திருப்பதி தேவஸ்தான காலண்டர்கள், டைரிகளை சென்னை, வேலூர், காஞ்சிபுரம், பெங்களூரு, ஹைதரபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், டெல்லி, மும்பை ஆகிய ஊர்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்கள் மற்றும் கோயில்களிலும் கிடைக்க வழி வகுக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வாங்க www.tirumala.org/ttdevasthanams.ap.gov.in எனும் இணையங்கள் மூலமாக முன்பதிவு செய்து கொண்டால், தபால் அலுவலகம் மூலமாக பக்தர்களின் வீடுகளுக்கே நேரில் வழங்கும் விதமாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.