

சென்னை: “அயோத்தியில் ராமர் கோயிலில் தரிசனம் செய்ய திட்டமிட்ட உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் மற்றும் காங்கிரஸ் கட்சியின் குழுவினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இன்று, ராமரை தரிசனம் செய்ய அயோத்திக்குச் செல்ல காங்கிரஸ் குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், காணிக்கைகளைத் திருடிய விவகாரத்தில் சிக்கியுள்ள பாஜக அரசு, உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் மற்றும் குழுவின் பிற உறுப்பினர்களை வீட்டுக் காவலில் வைத்துள்ளது.
காணிக்கைகளைத் திருடும் இவர்களுக்கு, ஸ்ரீ ராமரின் பக்தர்கள் மீது ஏன் இவ்வளவு பயம்? இனி யார் இறைவனைத் தரிசிக்கலாம், யார் தரிசிக்கக்கூடாது என்பதை பாஜக, ஆர்எஸ்எஸ்காரர்களா தீர்மானிக்கப் போகிறார்கள்?
கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை வைத்து பேரம் பேசும் பாஜக, ஆர்எஸ்எஸ்சை சேர்ந்த இந்தக் காணிக்கைத் திருடர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ஸ்ரீ ராமரின் ஆசி எங்களுக்கு உண்டு; உங்கள் அற்பமான தந்திரங்கள் எங்களைத் தடுத்து நிறுத்த முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் தடுத்து வைக்கப்பட்டது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள அஜய் ராய், “ஸ்ரீ ராமபிரானின் தரிசனத்துக்காகச் சென்ற எங்கள் காங்கிரஸ் குழுவினர், நேற்று இரவு முதல் உத்தரப் பிரதேச அரசின் காவல்துறையினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஆச்சார்யா நரேந்திர தேவா வேளாண் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் நாங்கள் சிறைவைக்கப்பட்டுள்ளோம்/
நன்கொடைகளைத் திருடுவது, நில மோசடிகளில் ஈடுபடுவது, காணிக்கைகளைச் சுருட்டுவது போன்ற செயல்களை பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர். இந்த மாபெரும் பாவத்திற்கு எதிராக இறைவனின் திருவடிகளில் நீதி வேண்டி புறப்பட்டபோது, நாங்கள் தடுக்கப்படுகிறோம்!
இறைவன் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். இங்கே நிகழ்த்தப்படும் ஒவ்வொரு அநீதிக்கும் கொடுமைக்கும் கணக்குத் தீர்க்கப்படும். இறைவனின் தரிசனம் கிடைக்காமல், நாங்கள் இங்கிருந்து ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம். சிறைக்குச் செல்ல நேர்ந்தாலும் சரி, அல்லது சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க நேர்ந்தாலும் சரி!” என தெரிவித்துள்ளார்.