

தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். உடன் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர். படம்: எல்.சீனிவாசன்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாணிக்கம் தாகூர் எம்.பி. பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தனது பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்தார்.
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணிக்கம் தாகூர் பேசியதாவது: தமிழகத்தில் கட்சி அமைப்பை நாம் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அடுத்து உள்ளாட்சித் தேர்தலும், 2029-ல் மக்களவைத் தேர்தலும் வரவுள்ளன. 2029 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40-க்கு 40 தொகுதிகளையும் வெல்வதே இலக்கு. தவெக உடனான கூட்டணி மரியாதையானது. அது உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்.
எனக்கு யாரிடமும் தனிப்பட்ட முறையில் வாய்க்கால் - வரப்புச் சண்டை எதுவும் கிடையாது. எங்களை அமைதியாக விட்டுவிட்டால், எங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால், யாராக இருந்தாலும் சரி, காங்கிரஸை அடித்தால் சும்மா இருக்க மாட்டேன். அவர்கள் காங்கிரஸை அடித்தால், திருப்பி அடிப்பேன். திமுக, அதிமுக, பாஜக, பாமக என எந்த கட்சியாக இருந்தாலும் சரி, காங்கிரஸைத் தொட்டால் திருப்பி அடிப்போம். எங்களை நக்கல், நையாண்டி செய்வதையோ, துரோகி என்று கூறுவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது.
எதிர்க்கட்சித் தலைவர் எப்போது ராகுல் காந்திக்கு எதிராக கோஷம் போட வைத்தாரோ, அப்போதுதான் அவரைப் பற்றிப் பேசினோம். திமுக தலைவர் பற்றி நான் ஒரு வார்த்தைகூட தவறாகப் பேசவில்லை. ‘அந்தமான் வனம் குறித்து பேசும் ராகுல் காந்தி, மேகேதாட்டு விவகாரத்தில் குரல் கொடுப்பதில்லை’ என்று பாமக தலைவர் அன்புமணி கூறுகிறார்.
இது படித்தவர் பேசும் பேச்சா? அந்தமானில் இயற்கை வளங்களை அழித்து துறைமுகம் அமைக்கும் மோடியின் செயலும் தவறுதான். கர்நாடகாவில் முதல்வர் டி.கே.சிவக்குமார் அணை கட்ட நினைப்பதும் தவறுதான். மேகேதாட்டுவில் ஒரு செங்கலைக்கூட வைக்க விடமாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கிரிஷ் சோடங்கர் கூறியபோது, ‘‘மாணிக்கம் தாகூரின் அனுபவம், அரசியல் ஆளுமையின்கீழ் தமிழகத்தில் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கப் போகிறோம். அடிமட்ட நிலையில் இருந்து காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி தமிழக காங்கிரஸ் தன்னை மறுமலர்ச்சி செய்து கொள்ளும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்’’ என்றார்.