

கான்பூர்: உ.பி.யைச் சேர்ந்த பிரபல புகையிலை வணிகர் கே.கே.மிஸ்ராவின் மகன் ஷிவம் மிஸ்ரா. இவர் நேற்று முன்தினம் கான்பூரில் உள்ள விஐபி சாலையில் தனது லம்போர்கினி ரெவுல்டோ சொகுசு காரில் அதிவேகமாக வந்துள்ளார்.
அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த மக்கள் மற்றும் வாகனங்கள் மீது மோதியது. முதலில் அந்த கார், ஒரு ஆட்டோ மீது மோதி, பிறகு ஒரு பைக் மீது மோதியுள்ளது. மேலும் மோட்டார் பைக்கை சிறிது தூரம் இழுத்துச் சென்று ஒரு மின் கம்பம் மீது மோதி நின்றது. இதில் மோட்டார் பைக்கில் வந்த தவுபிக் என்பவர் 10 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டு, பலத்த காயம் அடைந்தார். மேலும் 5 பேருக்கு எலும்பு முறிவும் சிராய்ப்புகளும் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஷிவம், மதுபோதையில் இந்த விபத்தை ஏற்படுத்தியதாகவும் விபத்துக்கு பிறகு அவர் காரில் தப்ப முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கார் கண்ணாடியை உடைத்து ஷிவத்தை வெளியே இழுத்து தாக்க முயன்றனர். இதை பின்னால் மற்றொரு காரில் வந்த ஷிவத்தின் பவுன்சர்கள் தடுக்க முயன்றனர். இறுதியில் போலீஸார் வந்து ஷிவத்தை மீட்டு அவரையும் விபத்தில் காயம் அடைந்தவர்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காரை பறிமுதல் செய்தனர். வடமேற்கு டெல்லியின் ரோகிணியில் பதிவு செய்யப்பட்ட இந்த காரின் விலை ரூ.10 கோடி. ஷிவத்தின் தந்தை கே.கே.மிஸ்ராவின் அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறை சோதனை கடந்த 2021 பிப்ரவரியில் நடைபெற்றது. இந்த சோதனையில் கே.கே.மிஸ்ரா ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.