

ம.பி சிந்த்தவாடா மாவட்ட பாஜக தலைவர் சேஷ்ராவ் யாதவ்
புதுடெல்லி: ம.பி.யின் சிந்த்தவாடா மாவட்ட பாஜக தலைவராக இருப்பவர் சேஷ்ராவ் யாதவ். இவர், அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி ஆளும் பாஜகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்த வகையில், அவர் மீண்டும் ஒரு சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.
சிந்த்தவாடா மாவட்டத்தின் பால் எனும் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் சேஷ்ராவ் யாதவ் கலந்து கொண்டார். இதில் அவர் பேசுகையில், ”பண்டிதர்கள் அரசு அதிகாரத்தையும் தங்களுடன் வைத்திருக்க விரும்புகின்றனர். அரசு நிர்வாகப் பணிக்கு பிற சமூகத்தினர் உள்ளனர். பண்டிதர்கள் வழிபாட்டுக்கான பூஜை, சடங்குகள் செய்வது மற்றும் அறிவை போதிப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆட்சி செய்யும் உரிமை மற்றவர்களுக்கே சொந்தமானது” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அப்போது மேடையில் சிந்த்வாடா தொகுதி பாஜக எம்.பி. பண்டி என்கிற விவேக் சாஹுவும் இருந்தார். பிராமணரான விவேக் சாஹு முன்னிலையில் அவர் இவ்வாறு பேசியது மேலும் உணர்வுப்பூர்வமாக்கியது. நிகழ்ச்சிக்குப் பிறகு, அவரது பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதைக் கேட்டு பிராமண சமூகத்தினரும் அவர்களது சங்கத்தினரும் கடும் கோபம் அடைந்து போராட்டங்களில் இறங்கி உள்ளனர்.
இது குறித்து ம.பி.யின் பல்வேறு பிராமண சமூக நிர்வாகிகள் கூட்டாக நடத்தியப் போராட்டத்தில், “சேஷ்ராவின் கருத்து அவமானகரமானது. அவர் பேசியது ஒரு மரியாதைக்குரிய சமூகத்தை இழிவுபடுத்தும் முயற்சி. சமூக நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவித்து, சமூகங்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் செயல். இதற்காக, சேஷ்ராவ் யாதவ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விஷயத்தில் பாஜக தலைமை அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
சேஷ்ராவ் யாதவ் இதற்கு முன் பேசிய ஒரு சர்ச்சை கருத்துக்கு அவர், மாநில பாஜக தலைவர் மற்றும் மாநில பொதுச் செயலாளரால் கண்டிக்கப்பட்டார்.