

புதுடெல்லி: உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதில், ஆளும் பாஜக தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. பிரதான எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
இச்சூழலில், மக்களவை எம்.பி-க்களான ஹைதராபாத்தின் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் மற்றும் உ.பி. நாகினா தொகுதியின் சந்திரசேகர ஆசாத்தின் ‘ஆசாத் சமாஜ் கட்சி (கான்ஷிராம்)’ ஆகியவை கூட்டணி அமைக்கின்றன. இவர்களுடன் மாநிலத்தின் சிறிய கட்சிகளும் இணைந்து மூன்றாவது அணியை அமைக்க உள்ளன.
உ.பி.யில் தலித் (21%) மற்றும் முஸ்லிம் மக்கள் தொகை (19%) 40% ஆக உள்ளது. சுமார் 41 தொகுதிகளில் தலித், முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தற்போது மாநிலத்தில் பலவீனமடைந்துள்ளது. இக்கட்சியின் பெரும்பாலான தலித் வாக்காளர்கள் பாஜகவுக்கு ஆதரவளிக்கத் தொடங்கிய நிலையில், அவர்களில் கணிசமானோர் தற்போது சந்திரசேகர் ஆசாத்தை நோக்கித் திரும்பியுள்ளனர். எனவே, சமூகக் கட்டமைப்பின் அடிப்படையில் ஒவைசி - ஆசாத் கூட்டணி மிகவும் வலிமையான ஒன்றாகக் கருதப்படுகிறது.
இக்கூட்டணியில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 40 முதல் 45 தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் போட்டியிடும் எனத் தெரிகிறது. மீதமுள்ள தொகுதிகளில் ஆசாத்தின் ஏஎஸ்பிகே மற்றும் இதர சிறிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்த வாய்ப்புள்ளது.
பாஜகவின் ஆட்சி தொடர்வதைத் தடுக்க இண்டியா கூட்டணியில் இணையத் தயாராக இருப்பதாக ஆசாத் மற்றும் ஓவைசி தரப்பில் விருப்பம் வெளிப்பட்டது.
ஆனால், சமாஜ்வாதியும் காங்கிரஸும் இவர்கள் இருவரையும் கண்டுகொள்ளவில்லை. இதனால் 3-வது அணி உருவாக உள்ளது. இதன் தாக்கம் கணிசமாக இருக்கும் எனத் தெரிகிறது. குறிப்பாக, முஸ்லிம் வாக்குகளை நம்பியுள்ள சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணிக்கு இதனால் அதிக இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பாஜகவுக்குத் தலித் வாக்குகளில் மட்டுமே லேசான சரிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.