பெரியார் அறிவுலகத்தில் மேலும் ஒரு பதிப்பகம் பெயரில் போலி புத்தகங்கள்: ஆய்வு மாணவர்கள் குற்றச்சாட்டு

பெரியார் அறிவுலகத்தில் மேலும் ஒரு பதிப்பகம் பெயரில் போலி புத்தகங்கள்: ஆய்வு மாணவர்கள் குற்றச்சாட்டு
Updated on: 
1 min read

கோவை: பெரியார் அறிவுலகத்தில் மேலும் ஒரு பதிப்பகத்தின் பெயரில் போலி நூல்கள் வைக்கப்பட்டுள்ளதாக, பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளின் ஆராய்ச்சி மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவையில் புதிதாக அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் எனப்படும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தில் அகல்விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் பெயரில், செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்ட, போலி நூல்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்த முறைகேடு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், பெரியார் அறிவுலகத்தில், ஆங்கில நூல்கள் பிரிவில் ‘விண்டேஜ் பிரஸ்’ என்ற பதிப்பகத்தின் பெயரில் போலி புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. பெரியார் அறிவுலகத்துக்கு படிப்பதற்கு வரும் ஆராய்ச்சி மாணவர்கள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பாக பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் சதீஷ்குமார் என்ற இஸ்க்ரா கூறும்போது, “பெரியார் அறிவுலகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில நூல்களில் போலி நூல்கள் இருக்கிறதா என ஆய்வு செய்த போது, விண்டேஜ் பிரஸ் என்ற பதிப்பகத்தின் 257 புத்தகங்கள் மீது சந்தேகம் வந்தது. இரண்டு நாட்களாக இந்த புத்தகங்களை ஆய்வு செய்தோம். ஒரே மாதிரியான தலைப்புகளில் 20-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன.

குறிப்பாக, சுற்றுலா தொடர்பாக 20 புத்தகங்கள் இருக்கின்றன. இந்த புத்தகங்கள் 2025-26 ஆகிய ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த பதிப்பகத்தின் அனைத்து புத்தகங்களும் 300 பக்கங்களுடன் இருந்தாலும் ஒரு புத்தகம் ரூ.9,900 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் வரை விலை கொடுத்து வாங்கியிருக்க வேண்டும். தள்ளுபடி போக என்றாலும் குறைந்தபட்சம் ரூ.17 லட்சம் மதிப்பில் இந்தப் புத்தகங்களை வாங்கியிருக்க வேண்டும். இந்தப் புத்தகங்களின் ஐஎஸ்பிஎன் எண்ணை சோதனையிட்டபோது அது போலியானது என்பது தெரிய வந்தது.

நூலின் உள்ளடக்கம் தொடர்பாக ஸ்கேன் செய்தபோது, அதில் ஆய்வு திருட்டு 64 சதவீதம் இருப்பதும், செயற்கை நுண்ணறிவு 70.7 சதவீதம் பயன்படுத்தியிருப்பதும் தெரிய வந்ததுள்ளது. இந்தப் பதிப்பக முகவரி லண்டன் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வலைதளத்தில் ஆய்வு செய்ததில், அங்கு எந்த பதிப்பகமும் இல்லை. அந்த முகவரியில் வேறு நிறுவனம் இயங்கி வருகிறது.

அதேபோல், புத்தகங்களை எழுதியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட பெயர்களே இதுவரை கேள்விப்படவில்லை. எழுத்தாளர்களின் பெயருடன் அவர்களின் புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த புகைப்படங்கள் வேறு நபர்களுடையது எனத் தெரிகிறது. எனவே, விண்டேஜ் பிரஸ் பதிப்பகத்தின் பெயரில் வந்த புத்தகங்களும் போலியானது ஆகும். இதுதொடர்பாக விசாரிக்க வேண்டும்” என்றார்.

பெரியார் அறிவுலகத்தில் மேலும் ஒரு பதிப்பகம் பெயரில் போலி புத்தகங்கள்: ஆய்வு மாணவர்கள் குற்றச்சாட்டு
“என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்துவதில் அதிகாரிகள் முறைகேடு” - பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

X