

புதுடெல்லி: போக்குவரத்து விதிகளை மீறுபர்களுக்கு ‘இ-சலான்’ மூலம் விதிக்கப்படும் அபராதங்களை மின் கட்டணத்துடன் இணைத்து வசூலிக்கலாம் என உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களை மின்னணு முறையில் அமல்படுத்துவது, செலுத்தப்படாத போக்குவரத்து ‘இ-சலான்’ அபராதங்களை வசூலிப்பது தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடு முழுவதும் சுமார் ரூ.45,000 கோடி மதிப்பிலான அபராதத் தொகை நிலுவையில் இருந்ததாகவும், அதில், இதுவரை சுமார் ரூ.25,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக காவல் துறையினர் ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ‘இ-சலான்’களை வழங்கக்கூடும் என்றாலும், அவற்றின் மூலம் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூலிப்பதே உண்மையான சவால். போக்குவரத்து அபராதத் தொகையை வசூலிக்க அதிகாரிகள் கள அளவில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகையை மக்கள் செலுத்தாத பட்சத்தில், அதனை அவர்களின் மின்சாரக் கட்டணத்துடன் சேர்த்துவிட வேண்டும். ஏனெனில், அவர்கள் மின்சாரக் கட்டணத்தை செலுத்தியே ஆக வேண்டும். இல்லையெனில், மின் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே, இதற்கான வழிமுறையை வகுத்துச் செயல் பட வேண்டும்.
இது ஒரு யோசனை மட்டுமே. நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவு அல்ல. மேலும், செலுத்தப்படாத ‘இ-சலான்’ கொண்ட வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தனர்.