“ஜெனரல் டயரையே மிஞ்சிவிட்டார் பிரதமர் மோடி” - கேஜ்ரிவால் கடும் விமர்சனம்

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால்

Updated on
1 min read

புதுடெல்லி: “டெல்லியில் போராட்டம் நடத்திய அப்பாவி இளைஞர்கள், பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஜாலியான் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் டயரையே பிரதமர் மோடி மிஞ்சிவிட்டார்” என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் மோடி அரசின் காவல் துறை மிக மோசமாக நடந்துகொண்டுள்ளது. அத்துடன் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்று மிரட்டலும் விடுக்கப்படுகிறது.

மோடி ஜி, இந்த நாடு உங்கள் தந்தையின் சொத்து அல்ல. 140 கோடி இந்தியர்களுக்குச் சொந்தமானது. மிரட்டுவதை நிறுத்துங்கள். இல்லையென்றால், இந்த நாட்டு மக்கள் சர்வாதிகாரிக்கு என்ன கதி ஏற்படும் என்பதை வரலாற்றுப் பாடமாக உங்களுக்குப் புகட்டுவார்கள்.

நம் நாட்டு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீது நேற்று மோடி அரசு நடத்திய கொடூரமான தாக்குதலைப் போல வரலாற்றில் இதுவரை பார்த்ததில்லை. மக்களை ஒடுக்குவதில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களைக் காட்டிலும் மோடி மிஞ்சிவிட்டார். சுதந்திரப் போராட்ட வீரர்களைக்கூட ஆங்கிலேயர்கள் இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள்.

சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களை பார்க்கையில், அமைதியான முறையில் நடந்து சென்ற மாணவர்கள் மற்றும் கையெடுத்துக் கும்பிட்ட பெண் பிள்ளைகள் மீது காவல்துறை இரக்கமின்றி நடத்திய தடியடியை பார்க்க முடிந்தது.

1919-ல் ஜாலியன்வாலா பாக்கில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட பிரிட்டிஷ் அதிகாரி ஜெனரல் டயரின் கொடூரத்தையே மோடி மிஞ்சிவிட்டார் என்று தோன்றுகிறது. சிலர் ஜெனரல் டயரே மோடி வடிவில் மீண்டும் பிறந்துவிட்டாரோ என்று பேசத் தொடங்கிவிட்டனர்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாமல் அழுது புலம்புகின்றனர். பல இளைஞர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு ரகசிய இடங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான சட்ட மற்றும் மருத்துவ உதவிகளை ஆம் ஆத்மி வழங்கும்.

நாட்டின் சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு உங்களுக்காகப் போராடுவோம். 140 கோடி மக்களும் இளைஞர்களின் பக்கமே நிற்கிறார்கள். எனவே யாரும் பயப்படத் தேவையில்லை” என்று கேஜ்ரிவால் கூறினார்.

<div class="paragraphs"><p>ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால்</p></div>
தாயகம் திரும்பிய ஸ்பெயின் சாம்பியன்கள்: உற்சாக வரவேற்பளித்த 20 லட்சம் மக்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in