

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் நடைபெற்ற விமான விபத்தில் துணை முதல்வர் அஜித் பவார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய மத்திய விமான போக்குவரத்து துறை உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய விமான போக்குவரத்து துறைக்கு கடிதம் அனுப்பினார்.
இந்த கடிதத்துக்கு பதில் அளித்து முதல்வர் பட்னாவிஸுக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ”விமான விபத்து தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் விமான விபத்து புலனாய்வு பிரிவு (ஏஏஐபி) ஏற்கெனவே விசாரணையை தொடங்கிவிட்டது. ஏஏஐபி மற்றும் டிஜிசிஏ புலனாய்வு குழுக்கள் விமான விபத்து நேரிட்ட இடத்தில் ஆய்வு நடத்தி உள்ளன. கருப்பு பெட்டி மீட்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
விமான விபத்து தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்தப்படும். தொழில்நுட்ப தரவுகள், விமானத்தின் இயக்கம், விபத்து நேரிட்ட பகுதி என அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது. இதை கவனமாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒத்துழைப்பு தேவை: விமான விபத்து குறித்து விரைவாக விசாரணை நடத்த மகாராஷ்டிர மாநில அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். குறிப்பாக உள்ளூர் நிர்வாகம், எங்களது புலனாய்வு அமைப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அஜித் பவார் பயணம் செய்த லியர்ஜெட் 45 விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விமான விபத்து புலனாய்வு அலுவலகம் (ஏஏஐபி) விசாரணையை தொடங்கியுள்ளது.
விசாரணை விரைவாக நடைபெறுவதாகவும், விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதாகவும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் உள்ள தகவல்கள் வெளியான பின்பு, விமான விபத்துக்கான காரணம் தெரியவரும்.
விமான விபத்து விசாரணைக்காக டெல்லி மற்றும் மும்பையில் இருந்து சென்ற ஏஏஐபி அதிகாரிகள் விபத்து நடத்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.