

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
புதுடெல்லி: நாட்டின் முக்கியத் தொழில்களை சீனா கைப்பற்றுவதற்கு மத்திய அரசு உதவி செய்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் கார்கே நேற்று கூறியதாவது: நமது நாட்டின் முக்கியத் தொழில்துறைகளுக்கு தேவையான பொருட்கள் சீனாவில் இருந்துதான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் அங்குள்ள தொழிற்சாலைகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் நல்ல வாய்ப்பும், அதிக லாபமும் கிடைக்கிறது. நமது நாட்டிலுள்ள முக்கிய தொழில்துறைகளை சீனா கைப்பற்றுவதற்கு மோடி அரசு உதவி புரிகிறது.
2020ம் ஆண்டில் நடந்த கல்வான் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி அதிகரித்து வருகிறது. கடந்த 2025- 26ம் ஆண்டில் 101.81 சதவீத அளவுக்கு இறக்குமதி அதிகரித்துள்ளது. 112.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு சீனாவில் இருந்து நமது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு மருந்துகளான ஆன்டிபயாடிக் மருந்துகள் 86 சதவீதம் சீனாவில் இருந்துதான் இறக்குமதியாகின்றன.
அதேபோல் மின்சார வாகனங்களுக்கான (இ.வி) கருவிகள், உதிரிபாகங்கள் 66 சதவீத அளவுக்கு சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. இ.வி.வாகனங்களுக்கான லித்தியம்-அயன் பேட்டரிகள் 75 சதவீத அளவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. நிரந்தர காந்தங்கள் கடந்த நிதியாண்டில் 93 சதவீத அளவுக்கு இறக்குமதியாகியுள்ளன.
இதுபோன்ற இந்தியாவின் முக்கிய தொழில்களையும், தொழில்துறைகளையும் கட்டுப்படுத்தும் அளவுக்கு சீனாவின் இறக்குமதி உள்ளது. இதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசே காரணம். இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.