

புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க எந்த நாட்டின் அனுமதியும் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து தடைபட்டு, உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை சுமார் 30 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.
இந்தச் சூழலில், 30 நாட்களுக்கு ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘‘ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா ஒருபோதும் எந்த நாட்டின் அனுமதியையும் சார்ந்து இருந்ததில்லை’’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் ‘‘ஹார்முஸ் பாதையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையிலும், இந்தியாவின் எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாகவும் சீராகவும் உள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் ஆதாரங்களை 27 நாடுகளிலிருந்து 40 நாடுகளாக பன்முகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பல மாற்று விநியோகப் பாதைகளை உறுதி செய்துள்ளது. தேசிய நலன் கருதி, எங்கெல்லாம் மிகவும் மலிவான விலையில் எண்ணெய் கிடைக்கிறதோ, அங்கிருந்து இந்தியா அதனை வாங்குகிறது’’ என கூறப்பட்டுள்ளது.