மின்தேவையை சமாளிக்க நிலக்கரி மின் நிலையங்கள் முழு திறனில் இயங்க மத்திய அரசு உத்தரவு

மின்தேவையை சமாளிக்க நிலக்கரி மின் நிலையங்கள் முழு திறனில் இயங்க மத்திய அரசு உத்தரவு
Updated on: 
1 min read

புதுடெல்லி: எல் நினோ தாக்கத்தால் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதனால், மின் தேவை அதிகரித்துள்ளது. வரும் மாதங்களில் மின்சாரத் தேவை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, அக்.1-ம் தேதி முதல் ஆண்டு இறுதி வரை 100-க்கும் மேற்பட்ட சொந்த பயன்பாட்டுக்கான நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்கள் அதிகபட்ச உற்பத்தித் திறனில் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அதிகப்படியாக உற்பத்தியாகும் மின்சாரத்தை மின் பரிமாற்றச் சந்தைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்றும் மத்திய மின் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மின்சார சட்டத்தின் அவசரகால விதிகளின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, குறைந்தபட்சம் 50 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மின் நிலையங்களுக்கு பொருந்தும்.

இந்த சொந்த பயன்பாட்டு மின் நிலையங்கள் பெரும்பாலும் அலுமினிய உருக்காலைகள், எஃகு உற்பத்தி நிறுவனங்கள், சிமெண்ட் ஆலைகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற தங்கள் தொழில் நிறுவனங்களின் தேவைக்காக மின்சாரம் உற்பத்தி செய்கின்றன.

குறிப்பாக, வேதாந்தா, டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்தியன் ஆயில், பாரத் அலுமினியம், ஹிந்துஸ்தான் ஜிங்க் மற்றும் நயாரா எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 112 மின் நிலையங்கள் இந்த உத்தரவின் கீழ் வருகின்றன.

உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு, சொந்த பயன்பாட்டுக்கான மின்சார நுகர்வு, விற்பனை செய்யப்பட்ட மின்சாரம் மற்றும் நிலக்கரி கையிருப்பு உள்ளிட்ட விவரங்களை வாரந்தோறும் மத்திய மின்சார ஆணையத்திடம் மின்னுற்பத்தி நிலையங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, குஜராத்தின் முந்த்ராவில் உள்ள டாடா பவரின் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்தும் மின்னுற்பத்தி நிலையம் முழு உற்பத்தித் திறனில் இயங்க வேண்டும் என்ற முந்தைய அவசரகால உத்தரவு டிச.31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மின்சார சட்டத்தின் 11-வது பிரிவின்படி, அசாதாரண சூழ்நிலைகளில் மின்னுற்பத்தி நிலையங்களை அரசின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப இயக்குமாறு மின் உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்தேவையை சமாளிக்க நிலக்கரி மின் நிலையங்கள் முழு திறனில் இயங்க மத்திய அரசு உத்தரவு
‘பஜன் கிளப்பிங்’ நிகழ்ச்சியில் ஜென் ஸி இளைஞர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in