

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற ‘பஜன் கிளப்பிங்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஜென் ஸி இளைஞர்களுடன் இணைந்து, பிரபலமான ‘பார்வதி’ பக்திப் பாடலுக்கு கஞ்சிரா இசைக் கருவியை இசைத்து அனைவரையும் கவர்ந்தார்.
பாரதிய ஜன சங்க தலைவர் பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் 110-வது பிறந்த நாளையொட்டி, டெல்லியில் ‘பஜன் கிளப்பிங்’ நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்றார். ‘ஹனுமன் அன்ஷ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பார்வதி’ என்ற பிரபல பக்திப் பாடலை பாடகர் சாதுஸ் திவாரி பாடினார்.
அப்போது, ஜென் ஸி இளைஞர்களுடன் இணைந்து பிரதமர் மோடியும் உற்சாகமாக ரசித்தார். அத்துடன், அவர் கஞ்சிரா இசைக் கருவியை இசைத்து அனைவரையும் கவர்ந்தார்.
இந்நிகழ்ச்சியின் வீடியோவை பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அதில், “டெல்லியில் பஜன் கிளப்பிங். அற்புதம்!” என்று பதிவிட்டிருந்தார். இதுகுறித்து, ‘ஹனுமன் அன்ஷ்’ திரைப்பட நடிகர் ஷோபினவ் சத்யா, கூறும்போது, ‘‘பிரதமர் மோடி இந்நிகழ்ச்சிக்கு வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்த விதம், கைகளில் கஞ்சிரா இசைக் கருவியை வைத்துக் கொண்டு இசைத்த விதம் என அனைத்தையும் பார்த்தபோது, குழந்தைகளுக்கு நடுவே ஒரு குழந்தையாகவே அவர் மாறிவிட்டதைப் போல உணர்ந்தேன். இதை ஒரு உண்மையான துறவியால் மட்டுமே செய்ய முடியும்’’ என்றார்.
ஜென் ஸி இளைஞர் களிடையே வளர்ந்து வரும் ஒரு புதிய பொழுதுபோக்காக ‘பஜன் கிளப்பிங்’ உள்ளது. பாரம்பரிய பக்திப் பாடல்களை நவீன இசை நிகழ்ச்சிகளின் பாணியில் இது வழங்குகிறது. நவீன மேடை அமைப்பு, வண்ண விளக்குகள், நேரடி இசைக் குழுக்கள் மற்றும் உற்சாகமான இசை ஆகியவற்றுடன் பக்திப் பாடல்கள் பாடப்படுகின்றன. இளம் தலைமுறையினரை ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தும் வகையில் இது வடிவமைக்கப்படுகிறது.