‘கேரளம்’ ஆகிறது கேரளா: பெயர் மாற்றத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

‘கேரளம்’ ஆகிறது கேரளா: பெயர் மாற்றத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Updated on
1 min read

புதுடெல்லி: கேரளாவின் பெயரை கேரளம் என மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கேரளாவின் பெயரை கேரளம் என மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள சட்டப்பேரவையில் கடந்த 2024, ஜூன் 24 அன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், ‘‘இந்த மாநிலம் மலையாளத்தில் கேரளம் என்றே அழைக்கப்படுகிறது. மலையாளம் பேசும் மக்களுக்காக ஒன்றுபட்ட கேரளத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே வலுவாக எழுந்துள்ளது. ஆனால், அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் மாநிலத்தின் பெயர் கேரளா என்றே எழுதப்பட்டது.

எனவே, அரசியலமைப்பின் 3வது பிரிவின் கீழ் கேரளம் என்று திருத்தம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் கேரளா என்று உள்ளதை கேரளம் என மாற்றவும் மத்திய அரசை இந்த சட்டமன்றம் கேட்டுக்கொள்கிறது’’ என வலியுறுத்தினார்.

இந்த தீர்மானத்தின் மீது மத்திய அமைச்சரவை இன்று ஆலோசனை மேற்கொண்டது. சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய பிரதமர் அலுவலக கட்டிடமான சேவா தீர்த்தத்தில் முதல் முறையாக மத்திய அமைச்சரவைக் கூடி இது குறித்து ஆலோசித்தது. முடிவில், மாநிலத்தின் பெயரை கேரளா என்பதில் இருந்து கேரளம் என மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை அடுத்து, கேரளா (பெயர் மாற்றம்) மசோதா 2026-ஐ, குடியரசு தலைவர், கேரள சட்டப்பேரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பார். கேரள மாநில சட்டப்பேரவையின் ஒப்புதலை அடுத்து, பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து பெயர் மாற்றம் நடைமுறைக்கு வரும்.

கேரளாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில பெயர் மாற்றம் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 2023, ஆகஸ்ட்டில் இதேபோன்ற ஒரு தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை ஆராய்ந்த மத்திய உள்துறை அமைச்சகம் அதில் சில தொழில்நுட்ப மாற்றங்களை பரிந்துரைத்தது. அதன் காரணமாக, 2024-ல் கேரள சட்டப்பேரவையில் புதிதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

‘கேரளம்’ ஆகிறது கேரளா: பெயர் மாற்றத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இளைஞர் காங். தலைவர் உதய் பானு சிப் கைது - ராகுல் காந்தி கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in