புதுடெல்லி: ஏஐ உச்சி மாநாட்டில் ஆடையை களைந்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டார். அவரை நான்கு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டுக்குள் கடந்த 20-ம் தேதி நுழைந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், தாங்கள் அணிந்திருந்த டி சர்ட்டை களைந்து பிரதமர் மோடிக்கு எதிராகவும், இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராகவும் கோஷமிட்டனர். அவர்கள் அணிந்திருந்த டி சர்ட்களில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகைப்படங்கள், இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் பைல் உள்ளிட்ட வாசகங்கள் இருந்தன.
இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டத்துக்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் இன்று கைது செய்யப்பட்டார்.
பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 196, 61(2), 121(1), 132, 195(1), 221, 223(ஏ), 190, 197, 3(5) ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிந்த போலீசார், அவரை டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரிய நிலையில், 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
உதய் பானு சிப் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது நமது வரலாற்றுப் பாரம்பரியம். அது நமது ரத்தத்தில் கலந்துள்ளது. இது ஒவ்வொரு இந்தியரின் ஜனநாயக உரிமை.
சமரசம் செய்து கொண்ட பிரதமருக்கு எதிராக தேச நலனுக்காக அச்சமின்றி குரல் எழுப்பிய இளைஞர் காங்கிரசின் சக உறுப்பினர்களை நினைத்த நான் பெருமைப்படுகிறேன்.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் நாட்டின் நலன்கள் சமரசம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் நமது விவசாயிகளுக்கும் ஜவுளி தொழிலுக்கும் தீங்கு விளைவிக்கும். மேலும் நமது தரவுகளை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும்.
இந்த உண்மையை தேசத்துக்கு எடுத்துக் கூறியதற்காக இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் மற்றும் பிற இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருப்பது சர்வாதிகார போக்கு மற்றும் கோழைத்தனத்துக்கு எடுத்துக்காட்டு.
காங்கிரஸ் கட்சியும் நானும் நமது சக உறுப்பினர்களுக்கு ஆதரவாக உறுதியாக நிற்கிறோம். அச்சம் வேண்டாம். உண்மையும் அரசியலமைப்பும் எங்களுடன் உள்ளன’’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.