

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரூ.23,731 கோடி மதிப்பிலான தேசிய ஒருங்கிணைந்த உயிரி எரிவாயு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய திட்டத்துக்கு கோபர்தன் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இதன்படி கிராமங்கள்தோறும் வேளாண் கழிவுகள், மாட்டு சாணம், சர்க்கரை ஆலை கழிவுகள், காய்கனி கழிவுகள் ஆகியவற்றின் மூலம் உயிரி எரிவாயு உற்பத்தி செய்யப்படும்.
நடப்பு 2026-27 நிதியாண்டு முதல் 2035-36 வரை கோபர்தன் திட்டம் செயல்படுத்தப்படும். கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவை, முன்னணி நிறுவனங்கள் கொள்முதல் செய்து நாடு முழுவதும் விநியோகம் செய்யும்.
கோபர்தன் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 200 உயிரி எரிவாயு ஆலைகள் அமைக்கப்படும். இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் உயிரி எரிவாயு, இயற்கை எரிவாயுக்கு இணையானதாக இருக்கும். இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து இயற்கை எரிவாயு இறக்குமதி செய்வது கணிசமாகக் குறையும்.