

புதுடெல்லி: மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ஐ நடத்த மத்திய அமைச்சரவை ரூ.11,718 கோடியை ஒதுக்கி இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடியது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர், ‘‘மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ஐ நடத்த மத்திய அமைச்சரவை ரூ. 11,718 கோடியை ஒதுக்கி இருக்கிறது.
முன் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை டிஜிட்டல் வடிவில் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பிரத்யேக மொபைல் ஆப் மூலம் விவரங்கள் பதிவு செய்யப்படும். இதில் உள்ள தரவுகள் மத்திய போர்ட்டல் மூலம் கண்காணிக்கப்படும். தரவுகள் கசியாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், டேட்டா பாதுகாப்பு கொண்டதாக இந்த டிஜிட்டல் நடைமுறை திட்டமிடப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.
இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இது 2026 செப்டம்பர் மாதத்தில் முடிவடையும். இந்த முதல் கட்டத்தில் வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு வசதிகள் குறித்து கணக்கெடுக்கப்படும். இந்த கணக்கெடுப்பு அந்தந்த மாநில / யூனியன் பிரதேசங்களின் வசதிக்கு ஏற்ப 30 நாட்களுக்குள் நடத்தப்படும்.
இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பிப்ரவரி 2027-ல் மேற்கொள்ளப்படும். இதில் மக்கள் தொகை குறித்து கணக்கெடுக்கப்படும். இதில், சாதி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும். அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு பயனர்களிடம் இருந்து வரும் உள்ளீடுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வினாத்தாள் இறுதி செய்யப்படும். இந்த கணக்கெடுப்பு நாடு முழுவதும் ஒவ்வொரு வீடாகச் சென்று மேற்கொள்ளப்படும்.
நாட்டின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு இது. சுதந்திரத்துக்குப் பிறகு நடத்தப்படும் 8வது கணக்கெடுப்பு இது. உலகின் மிகப் பெரிய இந்த கணக்கெடுப்பு பணியில் 30 லட்சம் களப்பணியாளர்கள் ஈடுபட உள்ளார்கள். வசிக்கும் வீட்டின் நிலை, வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள், சொத்துக்கள், சாதி, மதம், மொழி, கல்வி அறிவு, பொருளாதார செயல்பாடு, இடப்பெயர்வு உள்ளிட்ட தரவுகள் சேகரிக்கப்படும். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2021ல் இது நடத்தப்பட்டிருக்க வேண்டும். கரோனா தொற்று உள்ளிட்ட காரணங்களால் இது தள்ளிப் போனது.