

புதுடெல்லி: டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நிலவும் காற்று மாசு பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதித்து தீர்வு காண வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் உரை நிகழ்த்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நமது நாட்டின் பெரு நகரங்களில் பல காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான குழந்தைகள் நுரையீறல் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் எதிர்காலம் அழிக்கப்படுகிறது. மக்களுக்கு புற்று நோய் வருகிறது. வயதானவர்கள் சுவாசிக்க சிரமப்படுகிறார்கள்.
இது ஒரு சுவாரஸ்யமான பிரச்சினை. ஏனெனில், இந்த விஷயத்தில் அரசாங்கத்துக்கும் எங்களுக்கும் (எதிர்க்கட்சிகளுக்கும்) இடையே முழுமையான உடன்பாடு இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். இது ஒரு சித்தாந்த பிரச்சினை இல்லை. இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். நாங்கள் அரசுக்கு ஒத்துழைக்க விரும்பும் ஒரு பிரச்சினை இது என்பதை அவையில் உள்ள அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.
நமது நகரங்களில் காற்று மாசுவை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து அரசாங்கம் ஒரு திட்டத்தை உருவாக்குவது முக்கியம். அத்தகைய திட்டத்தை உருவாக்குவதில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இப்போதெல்லாம், அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் உடன்படக்கூடிய பிரச்சினைகள் மிக மிகக் குறைவு. காற்று மாசு குறித்து அரசாங்கம் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். நீங்கள் எங்களை குற்றம் சொல்வது அல்லது நாங்கள் உங்களை குற்றம் சொல்வது என்பதாக இல்லாமல், விவாதம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
விரிவான விவாதத்துக்குப் பிறகு பிரதமர், ஒவ்வொரு மாநகருக்கும் தனித்தனி திட்டத்தை வகுத்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன். அடுத்த ஐந்து அல்லது பத்தாண்டுகளுக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் போகலாம். ஆனால், பிரச்சினையை எவ்வாறு நிவர்த்தி செய்வது மக்களின் வாழ்க்கையை எவ்வாறு எளிதாக்குவது என்பதில் நாம் முன்னேற்றம் அடைந்திருப்போம் என தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் உரையை அடுத்துப் பேசிய மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அனைத்து முக்கிய விஷயங்களிலும் ராகுல் காந்தி தலைமையிலான பிரதான எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்களின் பரிந்துரைகளையும் எடுத்துக்கொண்டு விவாதிக்கவும் தீர்வு காணவும் அரசாங்கம் முதல் நாளில் இருந்தே தயாராக உள்ளது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. பல்வேறு சட்டங்கள் மற்றும் விதிகளின் கீழ் இந்த விவாதத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பதைப் பார்ப்போம் என தெரிவித்தார்.