

புதுடெல்லி: வரும் 2027 உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
உ.பி. மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம், உ.பி. பாஜக செயற்குழுக் கூட்டம் லக்னோவில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: உ.பி.யிலிருந்து பாஜகவை யாராலும் அகற்ற முடியாது. உ.பி. மாநிலத்தைப் பொறுத்தவரை அக்டோபர் 30-ம் தேதி என்பது ஒரு முக்கியமான நாளாகும்.
துப்பாக்கிச்சூடு
இதே நாளில் கடந்த 1990-ம் ஆண்டில் சமாஜ்வாதி ஆட்சியில் அயோத்தியில் ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. எந்த முகத்தை வைத்துக்கொண்டு சமாஜ்வாதி கட்சி, ஆட்சி அமைப்பதைப் பற்றிப் பேசுகிறது? நீங்கள் ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினீர்கள். ஆனால், நாங்களோ ராமர் கோயிலைக் கட்டினோம். உங்கள் மூன்றாவது தலைமுறை வரை கூட மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்.
கல்யாண் சிங், தன் ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் சர்ச்சைக்குரிய கட்டிடத்தை (பாபர் மசூதி) இடித்தார். இங்கு உள்ள பாஜக அரசு என்பது ‘அங்கதனின் கால்’ (அசைக்க முடியாத ஒன்று) போன்றது. அதை யாராலும் அகற்ற முடியாது. உ.பி.யில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மூன்றாவது முறையாக உ.பி.யில் ஆட்சி அமையட்டும். நாங்கள் இங்கே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம். இவ்வாறு அமித் ஷா பேசினார்.