

அகமதாபாத்: கடைசி மூச்சு வரை மக்களுக்காக உழைப்பேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் பனஸ்கந்தாவில் 127 ஏக்கரில் கால்நடை இனப்பெருக்க ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த மையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை திறந்து வைத்தார். மேலும் அங்கு இரு பயோ உயிரி எரிவாயு மையங்களை அமைக்க அடிக்கல் நாட்டினார். பின்னர் பனஸ்கந்தாவில் நடைபெற்ற விழாவில் ரூ.14,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அகமதாபாத் மெட்ரோ 2-ம் கட்ட திட்டம் உட்பட சில திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். விழாவில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 24-வது தவணையாக சுமார் 10 கோடி குறு, சிறு விவசாயிகளுக்காக ரூ.19,000 கோடியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது: கடந்த கால அரசுகள் விவசாயிகளை ஏமாற்றி வந்தது. பாஜக அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை உட்பட விவசாயிகளுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது.
வேளாண் சாகுபடிக்காக 12 லட்சம் சூரிய மின் உற்பத்தி சாதனங்கள் வழங்கப்பட்டதன்மூலம் ரூ.50 லட்சம் கோடி மதிப்பிலான மின்சாரம் சேமிக்கப்பட்டு உள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் தேன் உற்பத்தி இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதன்மூலம் தேன் ஏற்றுமதியில் 2-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் போர்கள் நடைபெற்று வருவதால் ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் சிலர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். உரங்கள், சமையல் காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.
உலகம் முழுவதும் உரம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை உரம் ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் இந்திய விவசாயிகளுக்கு ரூ.300 விலையில் தட்டுப்பாடு இன்றி உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இன்று 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் சுமார் ரூ.19,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தில் குஜராத்தில் மட்டும் 50 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் குறு, சிறு விவசாயிகளுக்கு இதுவரை ரூ.4.5 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். இத்தனை ஆண்டுகளும் குஜராத் மக்கள் எனக்கு பேராதரவை வழங்கி வருகின்றனர். அவர்களுக்கு மனதின் ஆழத்தில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது கடைசி மூச்சு உள்ள வரை மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.