“இந்தியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை” - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

“இந்தியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை” - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் உள்ள குறைபாடுகளும், கல்வி முறையில் உள்ள சவால்களும் இளைஞர்களிடையே அமைதியின்மை, ஏமாற்றம் மற்றும் விரக்தியை ஏற்படுத்தி உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, “இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ளது என்பது நமக்கு ஏற்கனவே தெரியும். இளைஞர்களிடையே அமைதியின்மை, ஏமாற்றம், விரக்தி ஆகியவை நிலவுகின்றன. டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய போராட்டங்களில் இதை நாம் பார்த்தோம்.

தோல்வியடைந்த கல்வி முறை, கடந்த 12 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாத நிலை ஆகியவையே இதற்குக் காரணம். உற்பத்தித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

சிறு வணிகங்கள், வேலைவாய்ப்பை வழங்குபவர்கள், விவசாயத் துறை ஆகியவற்றை முடக்கும் வகையில் சில கொள்கைகள் உள்ளன. இது குறித்து நாங்கள் நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகிறோம்” என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

15 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 8.7 கோடி இந்தியர்கள் கல்வி, பயிற்சி, வேலைவாய்ப்பு என எதிலும் ஈடுபடவில்லை என்று நிதி ஆயோக் தனது ‘வளர்ச்சி அடைந்த இந்தியா @ 2047-க்கான திறன் மேம்பாட்டை மறுவடிவமைத்தல்’ என்ற அறிக்கையில் குறிப்பிட்டிருந்த நிலையில், பிரியங்கா இதனைத் தெரிவித்துள்ளார்.

2021-ல் நடத்தப்பட்ட தேசிய மாதிரி ஆய்வின் 78-வது சுற்றின் தரவுகளின் அடிப்படையில் அமைந்த இந்த அறிக்கை, இவர்களை 'NEET' (கல்வி, வேலைவாய்ப்பு அல்லது பயிற்சியில் ஈடுபடாதவர்கள்) இளைஞர்கள் என்று வகைப்படுத்தியுள்ளது.

“இந்தியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை” - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
இந்திய செய்தி சேனல்கள் மீது அமெரிக்க தூதர் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in