

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ
மும்பை: சமீபகால போராட்டங்களின்போது போராட்டக்காரர்களுக்கு எதிராக இந்தியா அதிகப்படியான அடக்குமுறையை கையாளுவதாக ஐநா நிபுணர்கள் விமர்சித்திருந்த நிலையில், அவர்கள் நிபுணர்களா அல்லது அந்த வார்த்தைக்கு எதிர் அர்த்தத்தை பிரதிபலிப்பவர்களா என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கிண்டலாக எதிர்வினையாற்றியுள்ளார்.
வினாத்தாள் கசிவு, நீட் தேர்வு முறைகேடு, வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் நாடு தழுவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்நிலையில், இத்தகையப் போராட்டங்களின்போது போராட்டக்காரர்களுக்கு எதிராக அடக்குமுறை கையாளப்பட்டதாக ஐநா மனித உரிமைகள் நிபுணர்கள் குழு குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட ஐநா நிபுணர்கள் குழு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ‘இந்தியாவில் நடந்த சமீபத்திய போராட்டங்கள் அமைதியான முறையில் நடந்தபோதிலும், சட்ட அமலாக்க அமைப்புகள் ஆயுதமற்ற மாணவர்கள் மீது தடியடி நடத்துவது போன்ற அடக்குமுறையை பயன்படுத்தி உள்ளன.
இதனால், போராட்டக்காரர்களில் சிலர் காயமடைந்துள்ளனர். பலர், மோசமான நடத்தைக்கு ஆளாகி உள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்பதை தடுத்துள்ளன.
அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறும், பொதுக் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடைகளை நீக்குமாறும், பயோமெட்ரிக் உள்ளிட்ட டிஜிட்டல் கண்காணிப்பு முறைகளைத் தவறாகப் பயன்படுத்துவதையும், இணைய சேவைகளை முடக்குவதையும் தவிர்க்குமாறும் அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறோம். மேலும், இது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஐநா நிபுணர்களின் இந்த அறிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. இது தொடர்பாக ஐநா அவையில் உரையாற்றிய இந்திய பிரதிநிதி பர்கா தம்ராகர், “சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுக்கள், முழுமையற்ற புள்ளிவிவரங்கள், இந்தியா குறித்த புரிதல் அற்ற அறிக்கைகள் ஆகியவற்றின் மூலம் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவைப் பற்றி எதிர்மறையான பிம்பத்தை ஏற்படுத்த முயல்வதை இந்தியா உறுதியாக எதிர்க்கிறது.
மனித உரிமைகளை அரசியல் அழுத்தத்துக்கோ, குறிப்பிட்ட நாடுகளை மட்டும் குறிவைப்பதற்கோ பயன்படுத்தக்கூடாது. மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் ஆதரங்களின் அடிப்படையில் பாரபட்சமற்ற அணுகுமுறை தேவை” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவரிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மார்கோ ரூபியோ, “ஐநா நிபுணர்களா? ஆமாம், அவர்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள். ஐநா நிபுணர்கள் என்று சொல்லமாலா அல்லது இது ஒரு முரண்பாடான சொல் என்று சொல்லலாமா” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
மேலும் அவர், “இது ஓர் உள்நாட்டு விவகாரம். இதில் நான் தலையிடப் போவதில்லை. இந்தியா ஒரு ஜனநாய நாடு. இங்கே தேர்தல்கள் நடைபெறுகின்றன. எனவே, இந்தியர்களின் உள்நாட்டு விவகாரங்களில் நான் எந்த பக்கமும் நிற்கப் போவதில்லை. இது இந்திய மக்கள் தீர்மானிக்க வேண்டிய மற்றும் கையாள வேண்டிய விஷயம்.
ஜனநாயகச் சூழலில் போராட்டங்களும் மாறுபட்ட அரசியல் கருத்துகளை வெளிப்படுத்துவதும் இயல்பானவை. அமைதியான போராட்டங்களுக்கும் வன்முறை போராட்டங்களுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. கியூபாவை எடுத்தக்கொண்டால் அங்கு எதிர்க்கருத்து கொண்டவர்கள் சிறையில் அடைக்கப்படுவது, நாடு கடத்தப்படுவது போன்ற அபாயங்களை எதிர்கொள்கிறார்கள்” என தெரிவித்தார்.