

கோப்புப் படம்
வாஷிங்டன் டி.சி: சமீபகால போராட்டங்களின்போது போராட்டக்காரர்களுக்கு எதிராக இந்தியா அதிகப்படியான அடக்குமுறையை கையாளுகிறது என்றும், இது நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், இத்தகைய குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
உலகில் மனித உரிமை நெருக்கடிகளைக் கண்காணிக்கவும், ஆவணப்படுத்தவும் ஐநா மனித உரிமைகள் சபையால் நிபுணர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஐநா மனித உரிமைகள் சபையால் நியமிக்கப்பட்ட போதிலும் இவர்கள் சுதந்திரமாக செயல்படக் கூடியவர்கள்.
இந்நிலையில், 20-க்கும் மேற்பட்ட ஐநா நிபுணர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ‘இந்தியாவில் நடந்த சமீபத்திய போராட்டங்கள் அமைதியான முறையில் நடந்தபோதிலும், சட்ட அமலாக்க அமைப்புகள் ஆயுதமற்ற மாணவர்கள் மீது தடியடி நடத்துவது போன்ற பலத்தைப் பயன்படுத்தி உள்ளன.
இதனால், போராட்டக்காரர்களில் சிலர் காயமடைந்துள்ளனர். பலர், மோசமான நடத்தைக்கு ஆளாகி உள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்பதை தடுத்துள்ளன. அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெறுவதை அதிகாரிகள் தடுக்கிறார்கள். போராட்டக்காரர்கள் காணாமல் போகும்படி செய்கிறார்கள்.
அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறும், பொதுக் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடைகளை நீக்குமாறும், பயோமெட்ரிக் உள்ளிட்ட டிஜிட்டல் கண்காணிப்பு முறைகளைத் தவறாகப் பயன்படுத்துவதையும், இணைய சேவைகளை முடக்குவதையும் தவிர்க்குமாறும் அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலயுறுத்துகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு, நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்டவற்றைக் கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் கடந்த ஜூலை மாதம் டெல்லியிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர்ந்து பல நாட்கள் நடைபெற்ற இந்த போராட்டங்கள், அவரது பதவி விலகலை அடுத்து முடிவுக்கு வந்தன.
இதையடுத்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்தும், இதற்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த போராட்டங்களை அடுத்து டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தை போராட்டம் நடத்துவதற்கான இடங்களின் பட்டியலில் இருந்து அரசு நீக்கியது. மேலும், வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்துவதற்கும் அனுமதி மறுத்தது. அரசின் இந்த நடவடிக்கைகளை ஐநா நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.
இதனிடையே, ஐநா நிபுணர்களின் இந்த அறிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. இது தொடர்பாக ஐநா அவையில் உரையாற்றிய இந்திய பிரதிநிதி பர்கா தம்ராகர், “சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுக்கள், முழுமையற்ற புள்ளிவிவரங்கள், இந்தியா குறித்த புரிதல் அற்ற அறிக்கைகள் ஆகியவற்றின் மூலம் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவைப் பற்றி எதிர்மறையான பிம்பத்தை ஏற்படுத்த முயல்வதை இந்தியா உறுதியாக எதிர்க்கிறது.
மனித உரிமைகளை அரசியல் அழுத்தத்துக்கோ, குறிப்பிட்ட நாடுகளை மட்டும் குறிவைப்பதற்கோ பயன்படுத்தக்கூடாது. மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் ஆதரங்களின் அடிப்படையில் பாரபட்சமற்ற அணுகுமுறை தேவை” என தெரிவித்துள்ளார்.