

புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான் 2 மணி நேர பயணமாக நேற்று டெல்லிக்கு வருகை வந்தார்.
ஈரான் அரசுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் 500 பாதுகாப்பு படை வீரர்கள், 4,500 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் திடீர் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏமன் நாட்டில் ஹவுத்தி, பிஎல்சி, எஸ்டிசி ஆகிய 3 குழுக்கள் தனித்தனியாக ஆட்சி நடத்தி வருகின்றன. இதில் ஹவுத்தி குழுவுக்கு ஈரானும், பிஎல்சி குழுவுக்கு சவுதி அரேபியாவும், எஸ்டிசி குழுவுக்கு ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு அளித்து வருகின்றன.
ஏமனில் எஸ்டிசி குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் வயல்களை ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்கள் நிர்வகித்து வருகின்றன. இந்த எண்ணெய் வயல்கள் மீது சவுதி போர் விமானங்கள் அண்மையில் தாக்குதல் நடத்தின. இதன் காரணமாக இதுவரை நட்பு நாடுகளாக இருந்த ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான் 2 மணி நேர பயணமாக நேற்று டெல்லி வருகை வந்தார். அவரை, பிரதமர் மோடி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “எனது சகோதரர் முகமது பின் ஜாயத் அல்நயானை நேரில் வரவேற்றேன். அவரது வருகை இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான உறவு, நட்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம், பாதுகாப்பு குறித்து இரு நாடுகளின் தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தியதாக வெளியுறவு துறை தெரிவித்துள்ளது. மேலும் காசா, ஈரான், ஏமன் விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சவுதி அரேபிய இளவரசர் சல்மான் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. சர்வதேச விவகாரங்களில் சிறந்த ராஜதந்திரியாகவும் அவர் போற்றப்படுகிறார்.