

கொச்சி: பிரபல எழுத்தாளர் லீலாவதிக்கு பிரியதர்ஷினி இலக்கிய விருதை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று வழங்கினார்.
கேரள காங்கிரஸ் கமிட்டியின் பிரியதர்ஷினி பதிப்பகம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக பிரியதர்ஷினி இலக்கிய விருதை சமீபத்தில் உருவாக்கியது. இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பை அளித்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த விருதை கேரளாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் லீலாவதிக்கு (98), கொச்சியில் நடைபெற்ற விழாவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று வழங்கினார்.
இலக்கிய பணிகளுக்காக சாகித்திய அகாடமி உட்பட பல விருதுகளை லீலாவதி வென்றுள்ளார். குருவாயூரில் பிறந்த இவர் தற்போது எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திரிக்ககரா பகுதியில் வசிக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது: எழுத்தாளர் லீலாவதி கேரளாவுக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார். அவர் இந்த வயதிலும் அதிகாலை 3 மணிக்கே எழுந்து எழுதுவதும், வாசிப்பதும் ஊக்குவிப்பாக உள்ளது. அமைதி கலாச்சாரம் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் என்னை கவர்ந்தன.
மக்கள் தங்கள் கருத்துக்களைத் தைரியமாக வெளிப்படுத்துவதன் மூலமே சிறந்த நாடுகள் உருவாகின்றன. மவுன கலாச்சாரம் என்பது வெறும் பேராசையினால் உருவானது. இது அபாயகரமானது. லீலாவதி எளிமையானவர். கேரளாவின் உணர்வை நான் அவரிடம் காண்கிறேன். இவ்வாறு ராகுல் கூறினார்.